தமிழகம்

மின் கசிவால் குளிர்சாதன பெட்டி தீப்பிடித்து எரிந்தது: உடனே வெளியேறியதால் உயிர் தப்பினர்

செய்திப்பிரிவு

திருத்தணியில் திமுக பிரமுகர் வீட்டில் மின் கசிவால் குளிர்சாதனப் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக திமுக பிரமுகரின் குடும்பத்தினர் உயிர் தப்பினர். 

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி கந்தன் நகர், வள்ளலார் தெருவைச் சேர்ந்தவர் ஷெரீப் (47). திமுக நிர்வாகியான இவர், முன்னாள் திருத்தணி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர். நேற்று முன்தினம் இரவு ஷெரீப் தன் மனைவி, குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வீட்டின் சமையல் அறையில் இருந்த குளிர்சாதனப் பெட்டி, மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. அப்போது விழித்துக் கொண்ட ஷெரீப், உடனடியாக தன் மனைவி, குழந்தைகளை எழுப்பி வெளியே அனுப்பினார். தொடர்ந்து, அவர், சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டரை தூக்கிக் கொண்டு, வீட்டைவிட்டு வெளியேறினார். அதற்குள் தீ மளமளவென பரவியது. 

இதுகுறித்து தகவலறிந்த திருத்தணி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், குளிர்சாதனப் பெட்டி மற்றும் சமையல் அறையில் இருந்த பொருட்கள் எரிந்து தீக்கிரையாகின. 
தீப்பிடிக்க தொடங்கிய உடனேயே, ஷெரீப் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியேறியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து, திருத்தணி  போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். 

SCROLL FOR NEXT