பழுதடைந்த யானைக்கவுனி ரயில்வே மேம்பாலம் இடிக்கப்பட்டு ரயில்வேயுடன் சேர்ந்து புதிய பாலம் அமைக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது துறைமுகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபு யானைக்கவுனி ரயில்வே பாலம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பதில்:
“பெருநகர சென்னை மாநகராட்சியில் வால்டாக்ஸ் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும் யானைக்கவுனி பாலச் சாலையில் அமைந்துள்ள யானைக்கவுனி பாலம் ரயில்வே துறையைச் சார்ந்ததாகும். இப்பாலத்தின் இருபுறமும் உள்ள அணுகு சாலைப் பகுதி மட்டுமே, பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இப்பாலம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ள காரணத்தால், கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு, ரயில்வே துறை மற்றும் போக்குவரத்துக் காவல் துறையால் தடை செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இப்பாலத்தின் கீழ் உள்ள, இருப்புப் பாதைகளை கூடுதலாக அமைக்க ஏதுவாக, பாலத்தின் ரயில்வே பகுதி நீளத்தை 47 மீட்டரிலிருந்து 150 மீட்டருக்கு நீட்டிக்க ரயில்வே துறை உத்தேசித்துள்ளது.
இப்பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணியில் தற்போதுள்ள 50 மீ நீளமுள்ள ரயில்வே பகுதி பாலம் அமைப்பதற்கு, ரயில்வே துறை பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து 50:50 விகிதாச்சாரத்தில் நிதி பங்களிப்பாகவும், புதிதாக 100 மீ நீட்டிக்கப்படவுள்ள பகுதியில் பாலம் அமைக்கும் பணி முற்றிலும் ரயில்வே துறை நிதி மூலமும், மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே பகுதி பாலப்பணிக்கான பொதுச் சீரமைப்பு வரைபடத்தை ரயில்வே துறை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சமர்ப்பித்தது. அந்த வரைபடத்திற்கு பெருநகர சென்னை மாநகராட்சி 28.02.2018 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, அணுகு சாலைப் பகுதிக்கான, வடிவமைப்பு மற்றும் வரைபடம் தயாரிக்கும் பணிக்கு கலந்தறிதற்கு உரியவர் தெரிவு செய்யப்பட்டு, வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 30 கோடி ஆகும்.
பழுதடைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ், ரயில்வே துறையால் இரும்புத்தூண்கள் நிறுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளதால், யானைக்கவுனி மேம்பாலத்தில் கனரக மற்றும் இலகு ரக வாகனப் போக்குவரத்து ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. பேசின்பாலச் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை - ஈ.வே.ரா பெரியார் சாலைகள் வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
மேலும், பாலத்தினை இடிப்பதற்கு ஏதுவாக, இரு சக்கர வாகனங்கள் செல்வதையும் தடை செய்ய ரயில்வே நிர்வாகம் காவல் துறையை அணுகியதில், மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்த பின்னர், அனைத்து வாகனங்களையும் தடை செய்யலாமென காவல்துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே பகுதி பாலப்பணிக்கான மதிப்பீடுகள் ரயில்வே துறையால் தயாரிக்கப்பட்டு பழைய பாலத்தினை இடித்துவிட்டு புதியதாகப் பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் ஒப்பந்தப் புள்ளிகள் எதுவும் பெறப்படவில்லை.
எனவே, ரயில்வே துறை பழைய பாலத்தினை இடிப்பதற்கு மட்டும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் மிக அதிகமான விலைப்புள்ளிகள் பெறப்பட்டதால் அவ்வொப்பத்தினை ரத்து செய்து மறு ஒப்பம் ரயில்வே துறையால் கோரப்பட்டுள்ளது.
ஒப்ப நாள் 23.07.2019 எனவும், ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளவாடங்களை மாற்றியமைத்த பின்னர் பழைய பாலத்தினை இடிப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும், புதிய பாலத்திற்கான ஒப்ந்தப் புள்ளிகள் தனியே கோரப்படும் எனவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையால் ரயில்வே பகுதியில் புதிய பாலம் அமைப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டவுடன், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கான ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்”.
இவ்வாறு அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.