அஞ்சல்துறை தேர்வை தமிழில் நடத்த தீர்மானம் நிறைவேற்ற முன்வராததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள். படம்: ம.பிரபு 
தமிழகம்

அஞ்சல் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் விவகாரம்; திமுக கூட்டணியின் 37 எம்பிக்கள் என்ன செய்தீர்கள்? பேரவையில் திமுக - காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முதல்வர் கேள்வி

செய்திப்பிரிவு

சென்னை

அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் விவகாரத்தில் திமுக கூட்டணியில் உள்ள 37 எம்பிக்கள் என்ன செய்தீர்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் இதுகுறித்து கொண்டு வரப்பட்ட சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம் வரு மாறு:

திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு: அஞ்சல் துறை பணி களுக்கான தேர்வுகள் இதுவரை தமிழ் உள்ளிட்ட மாநில மொழி களில் நடந்து வந்தது. ஆனால், நேற்று முன்தினம் (ஜூலை 14) நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடந்துள்ளது. இதன்மூலம் தமிழ்உள்ளிட்ட மாநில மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அஞ்சல் துறை பணிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் இந்தநடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் நடத்த வலியுறுத்தி பேர வையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் டி.ஜெயக்குமார்: அஞ்சல் துறை பணிகளுக்கான தேர்வில் முதல் தாளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், 2-ம் தாளில் தமிழ் உள்ளது.

இருமொழிக் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.

அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்பதுதான் அதிமுக அரசின் கொள்கை.

இதை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கும். அதேபோல் மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட திமுகவும் குரல் கொடுக்க வேண்டும்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் நடத்த வேண்டும் என்று திமுக உறுப்பினர் கூறியதையே அமைச்சரும் கூறினார். ஆனால், அதை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

அமைச்சர் டி.ஜெயக்குமார்: அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாடாளுமன்றம் சக்தி வாய்ந்த அமைப்பு. எனவே, அங்கு நமது கோரிக்கையை திமுக, அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.

துரைமுருகன்: நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள். 234 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்கிறீர்கள். இதில் திமுக, அதிமுக இருவரின் கொள்கையும் ஒன்றுதான். எனவே, அதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதில் அதிமுக அரசுக்கு என்ன தயக்கம்?

துணை முதல்வர் ஓபிஎஸ்: அஞ்சல் துறைத் தேர்வுகளை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடத்துவது குறித்து நாளை (ஜூலை 16) நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் குரல் எழுப்புவார்கள். அதற்கு மத்திய அரசு என்ன பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்து அரசு முடிவெடுக்கும்.

துரைமுருகன்: துணை முதல்வர் சாதுர்யமாகப் பதிலளிக்கிறார். நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்பினால் சபையை ஒத்தி
வைத்து விடுவார்கள். எனவேதான் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்துகிறோம்.

முதல்வர் பழனிசாமி: நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்பினால் மத்திய அரசு என்ன பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கையை நாம் முடிவு செய்ய லாம். இதைத்தான் துணை முதல்வரும், அமைச்சரும் தெரிவித்தனர். திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற முடிவோடு வந்திருந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் 37 எம்பி.க்களை வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள் என அதிமுகவைப் பார்த்து கேட்டீர்கள். இப்போது நாங்கள் கேட்கிறோம். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் உள்ள 37 எம்பிக்கள் என்ன செய்தீர்கள்?

துரைமுருகன்: இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை. ஆனால், வெளிநடப்பு செய்யும் முடிவோடு வந்திருப்பதாகக் கூறி எங்களை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியிருக்கிறார். அதைக்கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.

முதல்வர் பழனிசாமி: வெளிநடப்பு செய்ய காரணங்களைத் தேடித் தேடி பார்த்தார்கள். இப்போது இந்தி பிரச்சினையைக் கூறி வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழ்மொழி விஷயத்தில் திமுகவைவிட எங்களுக்கு 100 மடங்கு அதிகஉணர்வு உள்ளது. இப்பிரச்சி னையை நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் எழுப்பு வார்கள்.

சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி: அஞ்சல் துறை தேர்வுகளைத் தமிழில் நடத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படாததால் வெளிநடப்பு செய்கிறோம்.

துணை முதல்வர் ஓபிஎஸ்: இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி.க்கள் குரல் எழுப்புவார்களா?

கே.ஆர்.ராமசாமி: தமிழக காங்கிரஸ் எம்பி.க்கள் இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவார்கள்.
சட்ட அமைச்சர் சி.வி.சண் முகம்: எவ்வளவு விளக்கம் அளித்தாலும் ஏற்காமல் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மத்திய அரசைக்கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக வலியுறுத்துகிறது. மத்திய அரசுக்கும்,அதிமுக அரசுக்கும் இடையே எப்படியாவது சிக்கலை ஏற்படுத்தி அதில் குளிர்காய திமுக நினைக்கிறது. அது ஒருபோதும் நடக்காது. அதிமுக ஆட்சியை வீழ்த்த முடியாது. 

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

திமுக, காங்கிரஸுக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கரும் வெளிநடப்பு செய்தார். 
பின்னர் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் சிறிது நேரத் தில் பேரவைக்குத் திரும்பி நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT