வாணியம்பாடி அடுத்த நெக்கனாமலையில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க 5 இடங்களில் உள்ள கிணறுகளை ஆழப்படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெக்கனாமலை சுமார் 1,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த மலைக்கிராமத்தில் 167 குடும்பங்கள் உள்ளன. 900 பேர் வசித்து வருகின்றனர். 495 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம், கூலித்தொழில், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். இங்கு அரசு தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அதில், தற்போது 17 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர்.
தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவர்கள், அடுத்து படிக்க வேண்டுமென்றால் வாணியம்பாடிக்கு தான் வர வேண்டும். அதேபோல், இப்பகுதியில் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லை என கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் கோடை வெயில் கடுமையாக கொளுத்தியதால் நகரத்தில் மட்டும் அல்ல, மலைப்பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. நெக்கனாமலையில் தண்ணீர் பற்றாக்குறையால் மலைவாழ் மக்கள் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகினர். சாலை வசதி இல்லாததால் தண்ணீர் எடுக்க மிகவும் சிரமப்படுவதாக கூறி நெக்கனாமலையைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் ஆலங்காயம் ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்து, தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வலியுறுத்தினர். இதைதொடர்ந்து, கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஆலங்காயம் ஒன்றிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நெக்கனாமலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, மாவட்ட திட்ட இயக்குநர் பெரியசாமி கடந்த வாரம் நெக்கனாமலைக்கு சென்று அங்கு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தைக் கேட்டறிந்தார். அப்போது, இரவு முழுவதும் கண்விழித்து ஆழமான கிணற்றில் இறங்கி மலைவாழ் மக்கள் சொட்டுகின்ற தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருவதாக மலைவாழ் மக்கள் தெரிவித்தனர். பிறகு, நெக்கனாமலையில் உள்ள 2 கிணறுகளைத் தூர் வாரவும், 3 கிணறுகளை ஆழப்படுத்தவும் ரூ.12 லட்சம் நிதியை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது.
இதையடுத்து, நெக்கனாமலையில் கடந்த ஒரு வாரமாக கிணறுகளைத் தூர்வாரும் பணியிலும், கிணறுகளை ஆழப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதைக் கண்ட மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இது குறித்து மலைக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறியதாவது:
"பல ஆண்டுகளாகப் போராடி வந்ததற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. நெக்கனாமலைக்கு உட்பட்ட காளியம்மன் ஏரி, வண்ணாநேரி, குட்டைக்கிணறு ஆகிய 3 இடங்களில் உள்ள கிணறுகளை ஆழப்படுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல், நெக்கனாமலையில் உள்ள 2 கிணறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் கடந்த 2 நாட்களாக இங்கு மழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் சற்று உயரும் என எதிர்பார்க்கிறோம்.
அதேபோல், எங்களுக்கு சாலை வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சியடைவோம். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மனு அளித்து வருகிறோம். சாலை வசதி இல்லாததால் மலைவாழ் மக்கள் 7 கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று வருகிறோம். கர்ப்பிணிகள், முதியவர்கள், குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் டோலி கட்டி தூக்கிச்செல்லும் நிலை உள்ளதால், உடனடியாக சாலை வசதிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று முனுசாமி கூறினார்.