கிரானைட் முறைகேட்டை விசாரித்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் பெயரை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் சிக்கிய பிலிப் ராஜா என்பவர் மீது, மேலும் ஒரு மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் ரூ.80 லட்சம் மோசடி செய்திருப்பதாக ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை புகார் செய்துள்ளார்.
ஈரோடு, பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஆஷாபாலின். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையான இவர் நேற்று ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகார் மனுவின் விவரம் வருமாறு:
ஈரோடு நாடார்மேடு பகுதியைச் சேர்ந்த ஆல்வின் கே.பிலிப் ராஜா (50) என்பவர் ஓராண்டுக்கு முன் என்னிடம் அறிமுகமானார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளில் பலர் தனக்கு நண்பர்களாக இருப்பதாக தெரிவித்த அவர், ஈமு கோழி மோசடி நிறுவனங்களின் சொத்துகள் விரைவில் ஏலம் விடப்படுவதாகவும், குறைந்த விலையில் அவற்றை ஏலம் எடுத்து தருவதாகவும் கூறினார்.
மேலும், ஈரோடு சின்னசடையம் பாளையம், என்.ஜி.ஜி.ஓ.காலனி, முத்துசாமி காலனியில் உள்ள வீடுகளை வாங்கி தருவதாகவும் கூறினார். இதை நம்பி, எனது நகைகளை அடமானம் வைத்து ரூ.80.30 லட்சம் பெற்றார். அவர் உறுதியளித்தபடி எந்த சொத்தையும் வாங்கி தரவில்லை. நான் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றினார்.
இதுகுறித்து ஏற்கெனவே 4 முறை போலீஸில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, பிலிப் ராஜா விடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தொடர்பாக போலீ ஸார் விசாரணை நடத்தி வருகின் றனர். பிலிப் ராஜா ஏற்கெனவே திருப்பூரைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் உள்ளிட்ட 3 பேரிடம், சகாயம் பெயரை பயன்படுத்தி, கிரானைட் மோசடியில் சிக்கிய 88 லாரிகளை மீட்டு தருவதாக ரூ.61.50 லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.