முதல்வர் ஜெயலலிதா தலைமையி லான ஆட்சியில் தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.7,324 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக தலைவர் கருணாநிதி புகாருக்கு பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளி யிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப் பதாவது: மக்களை குழப்புவற்காக கருணாநிதி கடைசியாக கையில் எடுத்திருப்பதுதான் குடிநீர் பிரச்சினை. இவர் கடந்த 23-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க என்ன நடவடிக்கை? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து 8 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 276 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 திட்டங்கள் பயன்பாட்டிலும், 2 திட்டங்கள் சோதனை ஓட்டத்திலும் மற்ற 3 திட்டங்கள் செயலாக்கத்திலும் உள்ளன. மேலும் 8 பெரிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ரூ.2,408 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த திமுக ஆட்சியில் நாளொன்றுக்கு வழங்கப்பட்ட குடிநீர் 1,150 மில்லியன் லிட்டர். இந்த ஆட்சியில் 1,500 மில்லியன் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தமிழகத்தில் போதிய மழையின்மை காரணமாக ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க கடந்த மார்ச் மாதம் ரூ.95 கோடியே 50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.4,943 கோடி. இந்த ஆட்சியில் இதுவரை ரூ.7,324 கோடியே 34 லட்சம் செலவிடப்பட்டுள்ளது.
எனவே, குடிநீர் திட்டங்களுக்காக போதிய அக்கறை செலுத்தப்படவில்லை என்ற கருணாநிதியின் குற்றச்சாட்டு 2016-ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து சொல்லப்படும் பொய் ஆகும் என்று அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.