தமிழகம்

பொறியியல் பட்டதாரி கொலை வழக்கில் பெண் உட்பட 6 பேர் சிறையில் அடைப்பு: மேலும் பலருக்கு தொடர்பு - தனிப்படையினர் அதிர்ச்சி

செய்திப்பிரிவு

பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான பெண் உள்ளிட்ட ஆறு பேரும் நேற்று காலை திருச்செங்கோடு குற்றவி யல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோட்டிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித் துள்ளார். கடந்த ஜூன் 24-ம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக் கப்பட்ட நிலையில் இறந்து கிடந் தார். காதல் விவகாரத்தால் அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. அதை மறுத்த கோகுல்ராஜின் பெற்றோர், அவ ரைக் கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் உடலை வீசிய தாக புகார் கூறினர்.

கொலைக்கு காரணமானவர் களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் கோகுல் ராஜின் பெற்றோர் மற்றும் தலித் அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, வழக்கு விசாரணை தீவிரமடைந் தது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர். செந் தில்குமார் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய விசாரணையை அடுத்து கொலை வழக்காக மாற்றப்பட்டது. சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த யுவராஜ் உள்ளிட்ட சிலருக்கு கொலையில் தொடர்பிருப்பது தெரியவந்தது. கோகுல்ராஜ், கொலை செய்யப்படுவதற்கு முன், அவரை அந்த கும்பல் கண்ணைக் கட்டி காரில் அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.

அதையடுத்து யுவராஜ் உள்பட ஒன்பது பேர் மீது திருச்செங்கோடு நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதில் சதீஷ் (26), செல்வராஜ் (33), சந்திரசேகரன் (44), ரஞ்சித் (22), இளைஞர் ஒருவர் மற்றும் ஜோதிமணி (31) என ஒரு பெண் உள்பட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அனைவரும் நேற்று காலை திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வேலுமயில் முன் ஆஜர்படுத்தி, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் இளை ஞர் பரமத்தி வேலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் பட்டார். மேலும், தலைமறைவாக உள்ள யுவராஜ், அருண், சிவக்குமார் உள்ளிட்ட மூவரையும் தனிப்படை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறும்போது, ‘‘கைதான ஆறு பேர் கோகுல்ராஜை, கடத்திச் செல்ல உதவியுள்ளனர். அவர்கள் கோகுல்ராஜின் கண்ணைக் கட்டி காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். தலைமறைவாக உள்ள யுவராஜை கைது செய்தால், கொலைக்கான காரணம், அதில் கூடுதல் நபர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து தெரியவரும். தலைமறைவாக உள்ள யுவராஜ் உள்ளிட்டோர் விரைவில் கைது செய்யப்படுவர்’ என்றார்.

SCROLL FOR NEXT