தமிழகம்

ராமநாதபுரத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிக்க தேர்வு

செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத் தினரால் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும் ‘எலைட்’ சிறப்புப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிக்கத் தேர்வாகியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் உயர் கல்வி படிப்பதற்கு வாய்ப்பு இல்லாத மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சிறப்பான ஆசிரியர்கள் மூலம் ‘எலைட்’ சிறப்பு பயிற்சிகள் வழங்கும் முறையை மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் ஏற்படுத்தினார்.

2014-15-ம் கல்வி ஆண்டில் இப்பயிற்சி பெற்ற 34 மாணவ, மாணவியர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதில் 28 மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றனர்.

மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற மாணவன் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கும், கட்டிடக் கூலித் தொழிலாளியின் மகள் கிருஷ்ணவேனி என்கிற மாணவி மதுரை மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கும் தேர்வாகியுள்ளனர்.

மேலும் தங்கவேல் என்கிற மாணவி வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உதவியாளர் படிப்பிற்கும், திலகவதி என்கிற மாணவி எம்.ஐ.டி.யில் பொறியியல் படிப்பதற்கும், முத்துச் செல்வி என்கிற மாணவி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பதற்கும் தேர்வாகி உள்ளனர்.

இது குறித்து ‘எலைட்’ சிறப்புப் பயிற்சி முகாமின் ஒருங்கிணைப்பாளரும், முதுகலை கணித ஆசிரியருமான சே.நவநீதகிருஷ்ணன் எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

எலைட் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களையும், பயிற்சி பெறும் மாணவர்களையும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர் கண்காணித்து சிறந்த ஆலோசனைகளை வழங்கினர். இதன் வாயிலாக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

வரும் கல்வியாண்டில் ராமநாதபுரத்தில் எலைட் பயிற்சி பெறும் மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெறுவார்கள் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT