தமிழகம்

போலி மருந்து புழக்கத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 42 ஆயிரம் மாதிரிகள் சேகரித்து பரிசோதனை: ஆய்வு முடிவுகள் வந்ததும் நடவடிக்கை

சி.கண்ணன்

போலி, தரம் குறைந்த மருந்துகள் புழக்கத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்துக் கடைகளில் இருந்து 42 ஆயிரம் மருந்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.

நாடு முழுவதும் போலி மற்றும் தரம் குறைந்த மருந்துகள் பரவலாக விற்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்படும் 50 சதவீத மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. போலி, தரம் குறைந்த மருந்துகளால் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது.

இதைத் தடுக்கவும், தரம் குறைந்த மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. போலி மற்றும் தரம் குறைந்த மருந்துகளை ஆய்வு செய்து கண்டுபிடிக்குமாறு உத்தரப் பிரதேச மாநிலம் நொய் டாவில் உள்ள தேசிய பயோலாஜிக் கல்ஸ் நிறுவனத்துக்கு (என்ஐபி) மத்திய அரசு உத்தரவிட்டது.

நாடு முழுவதும் ஆய்வு

இதையடுத்து, என்ஐபி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சுரிந்தர் சிங் தலைமையில் 1,000 மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள், 1,000 தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் நாடு முழுவதும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், இஎஸ்ஐ மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், மருந்துக் கடைகளில் இருந்து சுமார் 42 ஆயிரம் மருந்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான மருந்துகளில் இருந்து 2 ஆயிரம் மாதிரிகள், துறைமுகங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் அனைத்தும் ஆய்வுக் கூடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

2 மாதங்களில் முடிவு

இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை முன்னாள் இயக்குநரும், ஆய்வுக் குழு உறுப்பினருமான டாக்டர் ஜி.செல்வராஜ் மேலும் கூறிய தாவது:

போலி மருந்துகளை கண்டுபிடிக்க கடந்த 2008-ம் ஆண்டு நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் மருந்துகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு 3 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. தற்போது போலி, தரம் குறைந்த மருந்துகளை கண்டுபிடிக்க உலக அளவில் முதல் முறையாக மிகப்பெரிய அளவிலான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எடுக்கப்பட்டுள்ள 42 ஆயிரம் மருந்துகளின் மாதிரிகள் சென்னை, ஐதராபாத், சண்டீகர், கொல்கத்தா உட்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆய்வுக்கூடங்களில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. சோதனை முடிவுகள் ஆகஸ்ட், செப்டம்பரில் வரும். போலி, தரம் குறைந்த மருந்துகள் குறித்த முழு விவரமும் அப்போது தெரிந்துவிடும்.

ஆய்வு முடிவுகள் அனைத்தும் கொல்கத்தா, ஐதராபாதில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். போலி, தரம் குறைந்த மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பான அறிக்கையை அந்த நிறுவனம் தயாரித்து மத்திய அரசிடம் வழங்கும். அதன்பிறகு, போலி மற்றும் தரம் குறைந்த மருந்துகளை தயாரித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT