தமிழகம்

சன் குழுமம் மீதான நடவடிக்கை நீதிக்கு எதிரானது: கருணாநிதி

செய்திப்பிரிவு

சன் குழுமத்துக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடுஞ்செயலாகும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா முழுதும் பல்வேறு நகரங்களில் எப்.எம். ரேடியோவின் 135 சேனல்களுக்கு உரிமம் வழங்க மத்திய அரசின் செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளதையொட்டி, ஒலிபரப்பு சேவைக்கென தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்ட டெண்டரில் சன் குழுமத்தின் ஐந்து விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.

மத்திய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சகம் தர வேண்டிய "பாதுகாப்புச் சான்றிதழ்" சன் குழுமத்தின் எப்.எம். சேனல்களுக்கு மறுக்கப்பட்டதாலேயே டெண்டரில் அவர்கள் கலந்து கொள்ளக் கூடாதென அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும், துல்லியமாக ஆய்வு செய்து; சன் குழுமத்திற்கு அனுமதி மறுத்தால், அது இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 14 மற்றும் 19 ஆகியவற்றை மீறுவதாக இருக்கும் என்று உறுதியான பரிந்துரையினை மத்திய அரசுக்கு ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில்; தற்போது சன் குழுமத்திற்கு அனுமதி மறுத்திருப்பது மத்திய அரசில் தொடர்ந்து பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கை என்று முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்தியத் தனியார் வானொலிகள் உரிமையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், உதய் சாவ்லா பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஒரிசா மாநிலத்தைப் புயல் தாக்கியபோது, மக்களுக்குச் சிறப்பாகத் தகவல்களைக் கொண்டு சேர்த்ததும், நேபாளம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு பேருதவியாக விளங்கியதும் சன் குழுமத்தின் சேனல்கள் தான். எனவே காரணங்கள் ஏது மில்லாமல் சன் குழுமத்தின் மீது எடுத்துள்ள நடவடிக்கை நீதிக்கு எதிரானது" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்தியன் பிராட்காஸ்டிங் பவுண்டேஷன் தலைவர், செய்தி ஒலிபரப்பாளர்கள் சங்கத் தலைவர், ஆங்கில ஏடுகள் சிலவற்றின் தலைவர்க்ள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், வைகோ போன்றவர்களும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தங்களின் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறார்கள்.

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நாட்டுக்கு எந்தவகையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதைத் தெளிவாக விளக்க முடியாத நிலையில் சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்.

எனவே மத்திய அரசு அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை பாதுகாத்திடும் வண்ணம் தன்னுடைய முடிவினை உடனடியாக மறு பரிசீலனை செய்திட வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT