தமிழகம்

டார்னியர் விமானத்தின் இறக்கைகள் கண்டெடுப்பு

செய்திப்பிரிவு

கடலில் மூழ்கியுள்ள டார்னியர் விமானத்தின் இறக்கைகள், சுழல் விசிறி உள்ளிட்ட மேலும் சில பாகங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடலோர காவல் படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் கடந்த மாதம் 8 ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது சிதம்பரம் அருகே காணாமல் போனது. அந்த விமானத்தில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேர் இருந்தனர்.

இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல்படை மற்றும் கடற்படை கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல் களும் ஈடுபடுத்தப்பட்டன. 34 நாட்களுக்கு பிறகு சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்துக்கு கிழக்கே 16.5 கடல் மைல் தொலைவில் கடலுக்கு அடியில் 1 கி.மீ. ஆழத்தில் விமானம் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் விமானத்தின் கருப்புப் பெட்டி மற்றும் சக்கரத் தின் சில பகுதிகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் விமானத் தின் இறக்கைகள், விமானத்தின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சுழல் விசிறிகள், விமானி அறையில் (காக்பிட்) உள்ள சில பொருட்கள் கிடைத்திருப்பதாக கடலோர காவல்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், கருப்புப் பெட்டியை ஆய்வு செய்வதற்காக ஓரிரு நாளில் அதை பெங்களூரு அனுப்பி வைக்க உள்ளனர். மாயமான விமானிகளை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT