‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து பெசன்ட் நகரில் கழிவுநீர் அகற்றப்பட்டுள்ளது.
பெசன்ட் நகரில் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பின் பின்புறம் 2-வது பிரதான சாலையில் தனியார் லாரி மூலம் கழிவுநீர் கொட்டப்படுவதாக நேற்று முன் தினம் (ஜூலை 24) ‘சொன்னது சொன்னபடி’ பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. அதன் விளைவாக, அந்த இடத்தில் தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றி விட்டதாக சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து குடிநீர் வாரியம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:
பெசன்ட் நகர் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் குடியிருப்பின் பின்புறம் தனியார் லாரிகள் கழிவுநீரைக் கொட்டுவதாக செய்தி வெளியாகியிருந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் குடிநீர் வாரிய பணிமனை பொறியாளரிடம் மனு அளித்திருந்தனர். அங்கு தேங்கியிருந்த கழிவுநீரை சென்னைக் குடிநீர் வாரிய கழிவுநீர் ஊர்தி மூலம் அகற்றி, அந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு கழிவுநீர் தேக்கம் இல்லை. மேலும் சென்னைக் குடிநீர் வாரிய கழிவுநீர் ஊர்திகள் கழிவுநீரை அந்த இடத்தில் கொட்டுவதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.