தமிழகம்

சென்ட்ரல் குண்டுவெடிப்பு: தகவல் சேகரிக்க சென்னை வருகிறது என்.ஐ.ஏ. குழு

செய்திப்பிரிவு

சென்னை சென்ட்ரலில் வியாழக் கிழமை எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவெடித்த சம்பவம் தொடர் பாக தகவல்கள் சேகரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) குழு ஒன்று சென்னை வருகிறது. குண்டுவெடிப்பு தொடர்பாக தகவல் திரட்டும்படி மத்திய அரசு கேட்டுக்கொள்ளவே இந்த குழு சென்னை விரைகிறது.

பயங்கரவாத செயல்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் பற்றி இந்த பிராந்தியத்தில் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதால் சென்னை குண்டுவெடிப்பு பற்றி தகவல்கள் மட்டுமே திரட்டப்படும் என தமிழக அரசுக்கு உத்தரவாதம் கொடுத்த பிறகே சென்னைக்கு குழுவை அனுப்பும் முடிவை மத்திய அரசு எடுத்தது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு தொடர்பாக விவரம் திரட்ட என்ஐஏ குழு சென்னைக்கு விரைவதாக உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க என்ஐஏ குழு அனுப்பப்படும் என சொன்னதும் தமிழக அரசு ஏற்க மறுத்தது., சிபிசிஐடி பிரிவு விசாரிக்கும் எனவும் அது கூறியது. என்ஐஏ விசாரணைக்கு மாநில அரசு ஒத்துக் கொள்ளும்வரை அதில் நாங்கள் தலையிட மாட்டோம, என்றார் ஷிண்டே.

இதனிடையே, பெங்களூர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான படங்களை ஆய்வு செய்யும் பணியை பாதுகாப்பு அமைப்புகள் தொடங்கி உள்ளன. பெங்களூர்-குவாஹாட்டி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் இருந்தவர்கள் பற்றியும் ஆய்வு தொடங்கியுள்ளது.

ரயில்பெட்டியில் பயணி இருக்கைக்கு அடியில் குண்டு வைத்தவர் பற்றி துப்பு சேகரிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT