கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள கதர் கிராமத் தொழில் வாரியத்தின் விற்பனை மையத்தை ஒட்டி காந்தி கூடம் என்ற பெயரில் காந்தி அருங்காட்சியகம் (புகைப்படக் கண்காட்சியகம்) அமைக்கப்பட்டுள்ளது.
1969-ம் ஆண்டு காந்தி நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்பட்டதையொட்டி நிறுவப்பட்ட இந்த கூடம் 1973-ல் திறந்து வைக்கப்பட்டது. காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவரது வாழ்க்கை சித்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
காந்தியின் வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டங்களிலான வரலாற்றை இங்குள்ள ஓவியங்களும், அபூர்வ புகைப்படங்களும் எடுத்துரைக்கின்றன.
இந்த அருங்காட்சியகம் அமைந்து கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆகியும் பெரும்பான்மை மக்களால் அறியப்படாமலே உள்ளது. காந்தி ஜெயந்தி, சுதந்திர, குடியரசு தின விழாக்களின்போது மாணவர்கள் ஆசிரியர்களை அழைத்து வருவர். சமீப காலமாக மாணவர்கள் வருகையும் குறைந்துவிட்டது. இந்த அருங்காட்சியகம் குறித்த தகவல் பலருக்கும் தெரியாமல் இருப்பதுதான் காரணம்.
இதுகுறித்து கோவை, தமிழ்நாடு காதி கிராமத்தொழில் வாரிய உதவி இயக்குநர் கண்ணன் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக காந்தி கூடத்தை பார்வையிட வருபவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எஸ்பிஐ ஏடிஎம் ஒன்று நிறுவ ஏற்பாடு நடந்து வருகிறது. கோவைக்கு வரும் வெளியூர்வாசிகள் மட்டுமல்லாது, உள்ளூர் மக்களும் இந்த கூடம் குறித்து தெரிந்து கொள்ளும்வகையில் திசை விளக்கப் பலகைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகின்றன.
காந்தியடிகள் உருவத்தில் மூன்று டிஜிட்டல் போர்டுகள் வரைபடத்தில் டிசைன் செய்யப்பட்டுள்ளன. ஃபோகஸ் லைட்டுடன் அமைக்கப்படும் அதற்கு சுமார் ரூ.30 லட்சம் செலவாகும். அதற்காக சிலரை அணுகியுள்ளோம்.
குழந்தைகளை இந்த மியூசியத்துக்கு அனுப்பிவைக்க பல்வேறு பள்ளிகளை தொடர்பு கொண்டுள்ளோம்.
இந்த ஏற்பாடுகளைச் செய்யும்போது, காந்தி ஜெயந்தி, சுதந்திர தினத்தில் மட்டுமல்லாது எல்லா நாட்களிலும் காந்தி கூடத்துக்கு மக்கள் வருகை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.