தமிழகம்

அனைத்து நீர்நிலைகளிலும் தூர்வார வேண்டும்: தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் தூர்வார வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீ வைகுண்டம் அணையில் தூர் வார வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலர் ஜோயல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 2-ம் அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த அமர்வு பிறப்பித்த உத்தரவின் பேரில் கடந்த ஜூன் 10-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், அணையை தூர் வார அனுமதி வழங்கியது. அணையை விரைவாக தூர் வார வேண்டும் என்றும் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாநில அரசு உத்தரவிடவில்லை எனக்கூறி தூர்வாரும் பணியை மேற்கொள்ளாமல் இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பல்வேறு மாவட்ட விவசாயிகளை திரட்டி, ஜூலை 5-ம் தேதி அணையில் தூர்வாரும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அங்கு தூர் வாரும் பணிகளுக்காக அரசு நேற்று முன்தினம் பூஜை போட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் ஜோயல் தரப்பில் ஆஜரான வைகோ, “நான் அறிவித்த போராட்டம் காரணமாக, அரசு, பணியைத் தொடங்க பூஜை போட்டுள்ளது. இது தீர்ப்பாயத்தையும், மக்களையும் ஏமாற்றும் வேலையாக இருக் கக்கூடும். எனவே பொதுப் பணித்துறை துரிதமாக தூர் வாரும் வேலையை செய்ய வேண்டும். மழை வெள்ளத்தை காரணம் காட்டி தாமதிக்க கூடாது. அதற்குரிய நவீன கருவிகளைக் கொண்டு தூர்வார வேண்டும்” என்று வாதிட்டார்.

உத்தரவு

அதனைத் தொடர்ந்து அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

ஸ்ரீ வைகுண்டம் அணையில் தினமும் தூர் வாரப்பட வேண்டும். மழை வந்தாலும் அதற்குரிய இயந்திரங்களைக் கொண்டு தூர்வார வேண்டும். ஒவ்வொரு நாளும் என்னென்ன பணிகள் மேற்கொள்வது என திட்டமிட்டு செயல்பட வேண்டும். அது தொடர் பாக 15 நாட்களுக்கு ஒரு முறை அமர்வு முன்பு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அமர்விடம் அறிக்கை

தமிழகத்தில் உள்ள நீர்நிலை களில் தூர்வாரும் பணி நடக்காமல் இருப்பது விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் உடனடியாக தூர் வாரும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அப்பணிகள் குறித்தும் அமர்விடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட அமர்வின் உறுப்பினர்கள், வழக்கு விசாரணையை ஜூலை 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT