தமிழகம்

சுய உதவிக் குழுக்களின் பொருட்களை விற்பனை செய்ய கல்லூரிகளில் சந்தை: மாநகராட்சி தகவல்

செய்திப்பிரிவு

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய கல்லூரிகளில் விற்பனை சந்தைகள் நடத்தப்படுகின்றன. இதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்கலாம்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் சணல் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், துணி வகைகள், இயற்கை உணவுகள் மற்றும் இதர பொருட்களின் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன திட்ட செயலாக்க அலகு மூலம் தேசிய, மாநில, மாவட்ட அளவில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ‘கல்லூரி சந்தை’ என்ற பெயரில் விற்பனை கண்காட்சிகளும் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் வருமானம் ஈட்டி, அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.

இக்கண்காட்சிகள் மற்றும் கல்லூரி சந்தைகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்கள் உற்பத்திப் பொருட்களின் மாதிரியுடன், கிண்டி, அண்ணா சாலையில் உள்ள மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலரிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044- 22350636 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT