கால்நடை மருத்துவப் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியலில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 6-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது.
தகுதியான 16,017 மாணவர் களுக்கான தரவரிசைப் பட்டியல் சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நேற்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்டது. பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.திலகர் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அப் போது பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் சேர்க்கைக் குழுத் தலைவர் மா.திருநாவுக்கரசு உடன் இருந்தனர்.
பி.வி.எஸ்சி - ஏ.ஹெச். படிப்புக் கான தரவரிசைப் பட்டியலில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சுரேஷ் முதலிடத்தை பிடித்தார். பி.டெக். கோழி உற்பத்தி தொழில்நுட்பம் படிப்பில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கே.ராஜேஷ் கண்ணா, பி.டெக். உணவுத் தொழில்நுட்பம் படிப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ரேவதி, பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் படிப்பில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வி.ஜெயசூர்யா ஆகியோர் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் முழு விவரத்தை http://www.tanuvas.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
கலந்தாய்வு
பி.வி.எஸ்சி - ஏ.ஹெச். படிப்புக் கான கலந்தாய்வு சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. பி.டெக். கோழி உற்பத்தி தொழில்நுட்பம், பி.டெக். உணவுத் தொழில்நுட்பம் மற்றும் பி.டெக். பால்வளத் தொழில்நுட்பம் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ் 8-ம் தேதி நடக்கிறது. மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அடுத்த வாரம் அனுப்பி வைக்கப்படும்.
பி.வி.எஸ்சி - ஏ.ஹெச். படிப் புக்கு 320 இடங்கள் (அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீதம்; 40 இடங்கள் ஒதுக்கீடு) மற்றும் பி.டெக். கோழி உற்பத்தி தொழில்நுட்பம், பி.டெக். உணவுத் தொழில்நுட்பம், பி.டெக். பால் வளத் தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளுக்கு தலா 20 இடங்கள் வீதம் 60 இடங்கள் உள்ளன.
விண்ணப்பம் குறைவு
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.திலகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கு கடந்த ஆண்டு 18 ஆயிரம் மாணவர்கள் விண் ணப்பித்தனர். ஆனால் இந்த ஆண்டு 16,715 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் குறைந்ததற்கான காரணம் பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். தமிழகத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் படும். அதன்பின் புதிய அரசு கல்லூரிகள் தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும். வட மாநிலங்களில் தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இருக் கின்றன. இதேபோல தமிழகத் திலும் தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி கேட்டு ஒருவர் விண்ணப்பித்துள்ளார். அதுபற்றி ஆலோசனை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.