அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ம் நாளை சர்வதேச மாணவர் தினமாக அறிவிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
மறைந்த அப்துல் கலாமின் நல்லடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார். அப்துல் கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதும் பிரதமர் மோடி யாரும் எதிர்பாராத வகையில் கலாமின் உறவினர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றார். இதைப் பார்த்த அவரது சிறப்பு பாதுகாப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்தனர். அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரா லெப்பை மரைக்காயரை (92) பார்த்ததும் அவரது காலில் விழுந்து பிரதமர் ஆசி பெற்றார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத மரைக்காயர் உள்ளிட்ட உறவினர்கள் நெகிழ்ச்சியில் திகைத்தனர். மரைக்காயர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. அவரிடம் பிரதமர், ‘உங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளேன். ஏதாவது வேண்டுமா எனக் கேட்டார். பிரதமர் பேசியது மரைக்காயருக்கு சரியாகப் புரியாததால், அவரது பேரன் ஷேக் சலீம் எடுத்துக் கூறினார். பேரனிடம் மரைக்காயர் சில விவரங்களை கூறினார்.
அதை பிரதமரிடம் ஷேக் சலீம் விளக்கும்போது, ‘அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15-ம் நாளை உலக மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஐக்கிய நாடுகள் சபையில் இதற்கான முயற்சியை இந்தியா முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்றார்.
இதற்குப் பதில் அளித்த பிரதமர், ‘சர்வதேச மாணவர் தினமாக உடனே அறிவிக்க இயலாது. இதற்கான முயற்சியை உரிய வகையில் மேற்கொள்வதாக’ உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து ஷேக் சலீம் கூறும்போது, ‘பெரியவர்கள் காலில் விழுவது மரியாதை நிமித்தமானது என்றாலும், பிரதமர் தாத்தா காலில் விழுவார் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. எங்களது கோரிக்கையை நிறைவேற்றினால் அப்துல் கலாமின் புகழ் காலம் உள்ளவரை இருக்கும். அப்துல் கலாமின் நல்லடக்கத்தை நாடே போற்றும் வகையில் சிறப்பாக நடத்திய மத்திய, மாநில அரசுகள், கண்ணீருடன் பங்கேற்ற பல லட்சம் பேருக்கும் நன்றி’ என்றார்.