சட்ட ஆணையர் உ.சகாயத்திடம் மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் 100 பக்க அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
கிரானைட் முறைகேடுகள் குறித்து உ.சகாயம் விசாரணையை மேற்கொண்டு வருகிறார். இதில் கடந்த ஜூலை 7-ம் தேதி ஆஜராகும்படி மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனுக்கு சகாயம் சம்மன் அனுப்பியிருந்தார். முறைகேட்டில் ஈடுபட்ட கிரானைட் குவாரி உரிமையாளர்கள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதில் சகாயம் அறிக்கை கேட்டிருந்தார்.
ஆனால் அவர் விடுமுறையில் சென்றதால் ஆஜராகவில்லை. மதுரை மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆறுமுக நயினார் நேற்று ஆஜராகி ஆட்சி யர் அளித்ததாக 100 பக்கங்கள் அடங்கிய சீலிடப்பட்ட அறிக்கையை சகாயத்திடம் அளித்தார்.
மேலும் குவாரி செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அளித்த 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிய மதுரை கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர்கள் மணிமாறன் (மேலூர்), ரத்தினவேல் (மதுரை கிழக்கு) ஆகியோர் அழைக்கப்பட்டனர். இவர்கள் முன்னிலையில் புகார்தாரர்களிடம் ஆய்வுக்குழு அலுவலர் பிரியதர்ஷினி நேற்று விசாரணை மேற்கொண்டார்.
அரசு தொழில் துறை செயலருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு, அவரது சார்பில் சென்னை கனிமவளத் துறை அலுவலர் ஒருவர் அறிக்கை தாக்கல் செய்தார். மதுரையில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய அன்சுல் மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த பாலகிருஷ்ணன் உட்பட மேலும் சிலர் வரும் நாட்களில் ஆஜராவார்கள் என ஆய்வுக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.