மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் வகையில் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்புவதை அரசு உறுதிபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியல் அமைப்பு ஒரு ஜனநாயக அரசியல் அமைப்பாகும். ஜனநாயக அரசியல் அமைப்பில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை மக்கள் கண்காணிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
அது அவர்களின் உரிமையும் கூட. சட்டமன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்புக் குறித்த வழக்கில் தனது கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்த மாநில அரசு, "தமிழக அரசு நிதிப்பற்றாக்குறையில் இருப்பதால், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக மக்களுக்கு ஒளிபரப்பு செய்வது சாத்தியமில்லை" என்று கூறியுள்ளது.
இது ஜனநாயக அத்துமீறலாகும். மக்கள் பிரதிநிதிகளை கண்காணிக்கிற மக்கள் உரிமையை நிராகரிப்பதுமாகும்.
எனவே, மாநில அரசு ஜனநாயக விரோத போக்கைக் கைவிட்டு மக்கள் தங்கள் கண்காணிப்புக் கடமையாற்றவும், மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும் வகையிலும் சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு வதை உறுதிபடுத்த வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபட வற்புறுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.