தமிழகம்

ஆவின் பால் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்: பால் முகவர்கள் நலச் சங்கம் கோரிக்கை

செய்திப்பிரிவு

ஆவின் பால் விலையை உடனடியாக தமிழக அரசு குறைக்க வேண்டுமென்று தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தைச் சேர்ந்த தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் தனது ஆரோக்யா பாலிற்கு லிட்டருக்கு 2 முதல் 5 ரூபாய் வரையும், தயிருக்கு 2 ரூபாயும் விலையைக் குறைப்பதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. இந்த பால் விலைக்குறைப்பை வெறும் கண்துடைப்பு நாடகமாகவே பார்க்கிறோம்.

தங்களது நிறுவனங்கள் இழப்பில் செயல்படுவதாகவும், பால் கொள்முதல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என பல காரணங்களைக் கூறி, கடந்த ஓராண்டில் மட்டும் லிட்டருக்கு 12 ரூபாய்வரை ஹட்சன் போன்ற அனைத்து நிறுவனங்களும் பால் விலையை உயர்த்தின.

தற்போது பால் விற்பனை கடும் வீழ்ச்சியடைந்ததின் காரணமாக விலையை குறைத்திட முன்வந்துள்ளன. தனியார் நிறுவனங்களும், தமிழக அரசும் உடனடியாக பாலிற்கான விற்பனை விலையை 6 முதல் 8 ரூபாய் வரை குறைத்திட வேண்டும்'' என்று பொன்னுச்சாமி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT