தமிழகம்

கும்பகோணம்: ஆபரேஷன் சிந்தூர் நினைவாக 500 கிலோ எடையில் ஐம்பொன் வெற்றித்தூண் வார்ப்பு

சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: கும்பகோணம் வட்டம் புளியஞ்சேரியில், 500 கிலோ எடையில் ஐம்பொன்னால் ஆன ஆபரேஷன் சிந்தூர் வெற்றித்தூண் வார்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 2025, ஏப். 22-ம் தேதி சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதில், பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி, அங்கிருந்த தீவிரவாதிகளின் முகாம் மற்றும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் சிலவற்றை அழித்தது.

இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்திய ராணுவத்தை கவுரவப்படுத்தும் வகையில், கடலூரில் இயங்கி வரும் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் ஐம்பொன்னால் ஆன வெற்றித்தூண், கும்பகோணம் வட்டம், புளியஞ்சேரியில் உள்ள குமார் சிற்பக்கூடத்தில் வடிவமைக்க முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி சுமார் 500 கிலோ எடையில், மூன்று அடி விட்டத்தில், எட்டு அடி உயரத்தில் ஐம்பொன்னாலான வெற்றித்தூண் வடிவமைக்கப்பதற்கான வார்ப்பட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற தென் பிராந்திய ராணுவ முன்னாள் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் அருண் தலைமை வகித்து தனது ராணுவ பணியின் போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றி பேசி, வார்ப்பட நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சத்தியநாராயணன் வரவேற்றார். ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் அசோசியேஷன் நிறுவன தலைவர் மில்டிரி பாபு ஏற்புரையாற்றினார். கட்டிடக்கலை வல்லுநர் நீலகண்ட லோகநாதன், கும்பகோணம் அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் படைவீரர்கள் நலச் சங்கத்தின் கும்பகோணம் பகுதி தலைவர் சுபேதார் மேஜர் மாசிலாமணி வாழ்த்துரையாற்றினார். தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நினைவு தூண் வடிவமைக்கும் சிற்பி குமாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டன. முடிவில் ஷைன் இந்தியா சோல்ஜர்ஸ் வெல்ஃபர் அசோசியேஷன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT