இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஜி.டி விரைவு ரயில் உட்பட 5 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய பிரதேசம் மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக தெற்கு ரயில்வே பல்வேறு விரைவு ரயில்களை ரத்து செய்து வருகிறது. இந்நிலையில், மேலும் 5 விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது.
பாட்னாவில் இருந்து 9-ம் தேதி புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வழியாக பெங்களூருக்கு செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில் (12296) ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் ஜி.டி விரைவு ரயிலும் (12615), புதுடெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் ஜி.டி விரைவு ரயிலும் (12616) 10-ம் தேதி (இன்று) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 12-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய ஜி.டி விரைவு ரயிலும் (12615), புதுடெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய ஜி.டி விரைவு ரயிலும் (12616) ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.