தமிழகம்

காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாட வேண்டும்: பள்ளிகளுக்கு அரசு உத்தரவு

செய்திப்பிரிவு

கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள காமராஜர் பிறந்த தினத்தை (ஜூலை 15) அனைத்துப் பள்ளிகளிலும் அரசு சார்பில் கொண்டாடவும் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்து பரிசு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி தினத்தை அரசு சார்பில் கொண்டாட அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறந்த மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.1 லட்சமும், ஒரு சிறந்த உயர்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு ரூ.75 ஆயிரமும் பரிசுத்தொகை வழங்கப்படும். இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறந்த நடுநிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு ரூ.50 ஆயிரமும், ஒரு சிறந்த தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT