வேலூரில் நடைபெற உள்ள மாநாடு திருப்பு முனையாக அமையும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இனறு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாற்றத்தை நோக்கிய பயணத்தின் அடுத்த கட்டமாக பாமகவின் நான்காவது மண்டல மாநாடு வரும் 26-ம் தேதி மாலை 4.00 மணிக்கு வேலூரை அடுத்த பள்ளிகொண்டா நகரில் நடைபெற இருக்கிறது. மண்டல மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற ‘‘2016 ஆட்சி மாற்றத்துக்கான மாபெரும் அரசியல் மாநாட்டில்’’ பாமகவின் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டார். ஆட்சி மாற்றத்தை நோக்கி அப்போது தொடங்கிய பாமகவின் பயணம் அடுத்தடுத்த முன்னேற்றங்களை எட்டியிருக்கிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் இரு வார இடைவெளியில் இரு பிரம்மாண்ட மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட வரலாறு இல்லை. அந்த சாதனை வரலாற்றை பாமகதான் முதன்முதலில் படைக்கவிருக்கிறது. அதற்கான களமாக அமையப்போவது வேலூரில் நடைபெறும் நான்காவது மண்டல மாநாடுதான். தமிழகத்தை ஊழல் மூலம் கொள்ளையடிப்போரை விரட்டியடிப்பதற்கான திருப்பு முனையாக இந்த மாநாடு அமையும்.
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றம்.. முன்னேற்றத்துக்கான வெற்றிக்கு இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும். அந்த வகையில் வேலூரில் நடைபெறவிருக்கும் வடக்கு மண்டல மாநாட்டில் நமது வெற்றிக்கான முரசு ஒலிக்கத் தொடங்கும் என்பது உறுதி. பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இந்த மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.