தமிழகம்

கன்னியாகுமரியில் நெல் விவசாயம் 5 ஆண்டுகளில் 1000 ஹெக்டேராக குறையும் அபாயம்

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்துவரும் நெல் விவசாய பரப்பளவை அதிகரிக்க வேளாண் கடன்முறையை வரைமுறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்புவரை 30 ஆயிரம் ஹெக்டேராக இருந்த நெல் விவசாயத்தின் பரப்பளவு, இன்று 6 ஆயிரம் ஹெக்டேரை கூட தாண்டவில்லை. கடந்த ஆண்டைவிட 600 ஹெக்டேர் தற்போது குறைந்துள்ளதாக வேளாண்துறையின் கணக்கெடுப் பின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது நெல் விவசாய பரப்பளவு குறைந்து வரும் நிலையை பார்த்தால் இன்னும் 5 ஆண்டுகளுக்குள் 1000 ஹெக்டேராக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என வேளாண் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை கன்னிப்பூ, கும்பப்பூ ஆகிய இரு சாகுபடி க்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. நல்ல மகசூல் இருந்தும் போதிய விலை கிடைக்காததாலும், நெல் விற்பனையில் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்யப்படாததாலும் நெல் பயிரிடுவதில் விவசாயிகளிடையே ஆர்வம் குறைந்து வருகிறது. ரசாயன உரம், இயற்கை உரம், கூலி என்று கணக்கு பார்த்தால் தொடர்ந்து நஷ்டமே வருகிறது என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.

அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால் நெல் விவசாய பரப்பளவு குறைந்து வருகிறது என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து திருப்பதிசாரத்தை சேர்ந்த விவசாயி ராஜய்யன் கூறும்போது, “தேசிய வங்கிகளில் முன்பெல்லாம் நகையை வைத்து வேளாண் கடன் குறைந்த வட்டியில் பெற்று வந்தோம். அதை வைத்து விவசாய சாகுபடி செய்து அறுவடை காலத்தின்போது கிடைக்கும் வருவாயை கொண்டு நகையை மீட்டு வந்தோம். ஆனால் இந்த ஆண்டிலிருந்து வேளாண் கடன் இல்லாமல் ஆகிவிட்டது. 10 சதவீதத்துக்கு மேல், அதிக வட்டிக்கே கடன் பெற முடிகிறது. இதனால் நெல் சாகுபடிக்கு தேவையான பணம் கிடைக்கவில்லை.

வழக்கமாக நெல் விவசாயம் செய்யும் வயலில் தற்போது மரவள்ளிக்கிழங்கை நட்டுள்ளேன். எனவே, வேளாண் கடன் வழங் கும் முறையில் தேவையான வரை முறைகளை வகுக்க வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து நெல் சாகுபடியில் ஈடுபட விவசாயிகள் முன்வருவார்கள்” என்றார்.

SCROLL FOR NEXT