பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகளில் நாளை (புதன்கிழமை) அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே மாதம் 14-ம் தேதி பள்ளிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டன.
இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு வசுந்தராதேவி கூறியுள்ளார்.