தமிழகம்

காதலித்து திருமணம் செய்ததால் ஆத்திரம்: வாய், கைகளை கட்டி காருக்குள் இளைஞர் அடைப்பு - 10 மணி நேரத்துக்குப் பின்னர் மீட்கப்பட்டார்

செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவரை வாய், கைகளை கட்டி காருக்குள் மர்ம கும்பல் பூட்டிச் சென்றது. 10 மணி நேரம் கழித்து அந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டு போலீஸில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் பல மணி நேரமாக ஒரு கார் நின்று கொண்டு இருந்தது. நேற்று காலையில் அந்த காரின் கதவு திடீரென திறந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதி மக்கள், காரின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது, காருக்குள் இளைஞர் ஒருவர் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்து இருந்தார்.

உடனடியாக பொதுமக்கள் அவருடைய கட்டுகளை அவிழ்த்து மீட்டனர். பின்னர் அவரிடம் விசாரித்தனர். இதில், அந்த இளைஞரின் பெயர் மோகன் என்றும் சேலத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா போலீஸார் அவரை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரிடம் போலீஸார் விசாரித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறிய தாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மோகன் காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்கள் சேலத்தில் வசித்து வந்தனர். தற்போது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அவர்கள் சேலத்தில் வசிப்பது தெரிந்து விட்டது. எனவே, கடந்த 23-ம் தேதி அந்த பெண்ணின் பெற்றோர் அந்தப் பெண்ணை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு தனது மனைவியை பார்க்கச் சென்ற மோகனை, பெண் வீட்டார் அடித்து, உதைத்து காரில் கடத்தி வந்து விழுப்புரம் பகுதியில் கை மற்றும் வாயைக் கட்டி காருக்குள் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் காருக்குள்ளேயே மோகன் இருந்துள்ளார். அதன்பிறகு, மெதுவாக சிரமப்பட்டு காலால் கார் கதவை திறந்துள்ளார். இது தொடர்பாக, விழுப்புரம் தாலுகா போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

          
SCROLL FOR NEXT