மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் பற்றி விசாரித்து வரும் சட்ட ஆணையர் சகாயம், அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 6 வாரம் அவகாசம் வழங்கியது.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை கண்டறிந்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஐஏஎஸ் அதிகாரி உ.சகா யத்தை சட்ட ஆணையராக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. அவர் தனது முதல் கட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இன்னும் பலரிடம் கேள்வித்தொகுப்பு வழங்கி பதில் பெற வேண்டியிருப்பதால் காலஅவகாசம் கேட்டு சகாயம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, காலஅவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதலாவது அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சகாயம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ் வாதிடும்போது, “6,687 பக்கங்கள் கொண்ட மனுக்கள், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்றுள்ளன. இன்னும் வந்தவண்ணம் உள்ளன. அவற்றை படித்துப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் ஒன்றரை மாதம் காலஅவகாசம் வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
மனுதாரரின் வேண்டுகோளை ஏற்று சட்ட ஆணையர் சகாயம் இறுதி அறிக் கையை சமர்ப்பிக்க மேலும் 6 வாரங்கள் காலஅவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.