தமிழகம்

1.31 கோடி மகளிருக்கு 3 மாத உரிமைத் தொகை, கோடை சிறப்பு தொகை: ஒரே தவணையில் ரூ.5,000 வரவு

உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் வாக்குறுதி

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் 3 மாத மகளிர் உரிமைத் தொகை தலா ரூ.1,000 மற்றும் கோடைகால சிறப்பு தொகை ரூ.2,000 என மொத்​தம் ரூ.5,000 ஒரே தவணை​யாக நேற்று வரவு வைக்​கப்​பட்​டது. மீண்​டும் ஆட்​சிக்கு வந்​ததும், மாதாந்​திர மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வாக்குறுதி அளித்​துள்​ளார்.

தமிழகத்​தில் கடந்த 2021-ம் ஆண்டு நடை​பெற்ற சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தலை​யொட்டி மு.க. ஸ்​டா​லின் வெளி​யிட்ட 7 வாக்​குறு​தி​களில் ஒன்​று, மகளிர் உரிமைத் தொகை​யாக மாதம் ரூ.1,000 வழங்​கப்​படும் என்​ப​தாகும். இத்​திட்​டம் கடந்த 2023-ம் ஆண்டு 1.06 கோடி மகளிரை பயனாளி​களாகக் கொண்டு தொடங்​கப்​பட்​டு, அதன்​பிறகு 1.13 கோடி​யாக உயர்த்​தப்​பட்​டது. சமீபத்​தில் இந்த எண்​ணிக்கை 1.31கோடி​யாக உயர்ந்​தது. மாதம்​தோறும் 15-ம் தேதி இந்த தொகை பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் செலுத்​தப்​பட்டு வரு​கிறது.

          

பெண்கள் மகிழ்ச்சி: இந்​நிலை​யில், பிப்​ர​வரி, மார்ச், ஏப்​ரல் ஆகிய 3 மாதங்​களுக்​கான மகளிர் உரிமைத் தொகை தலா ரூ.1,000 மற்​றும் கோடை​கால சிறப்​புத் தொகை ரூ.2,000 என மொத்​தம் ரூ.5,000 தொகை 1.31 கோடி பயனாளி​களின் வங்​கிக் கணக்​கில் நேற்று காலை ஒரே தவணை​யாக செலுத்​தப்​பட்​டது. மாதம்​தோறும் ரூ.1,000 பெற்று வரும் பெண்​கள் ஒரே தவணை​யில் ரூ.5,000 வரவு வைக்​கப்​பட்​ட​தால் மிக​வும் மகிழ்ச்சி அடைந்​தனர்.

இதுகுறித்து முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட காணொலி​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசு சார்​பில் இன்று (பிப்​.13) காலை​யில் உங்​கள் கணக்​கில் ரூ.5,000 வந்​திருக்​கும். எதற்​காக இந்த பணம்? திமுக ஆட்​சிக்கு வரு​வதற்கு முன்பு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்​கப்​படும் என்று அறி​வித்​தேன். இது சாத்​தி​யம் இல்லை என்று சிலர் கூறினர்.

ஆனாலும், நிதி நெருக்​கடியைச் சமாளித்​து, மத்​திய அரசின் ஓரவஞ்​சனையை​யும் மீறி, கடந்த 2023 செப்​டம்​பர் முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்​டத்​தை’ வெற்​றிகர​மாகச் செயல்​படுத்தி வரு​கிறோம். தற்​போது 1.31 கோடி குடும்​பத் தலைவி​கள் இத்​திட்​டத்​தில் பயன்​பெற்று வரு​கின்​றனர். இது வெறும் நிதி​யுதவி அல்ல. சமூகத்​தில் பெண்​கள் ஆற்​றும் பங்​களிப்பை அங்​கீகரிப்​ப​தற்​காக கொடுக்​கப்​படும் உரிமைத் தொகை. இந்த தொகையை வைத்​து, அன்​றாட வீட்​டுச் செல​வு​கள், மருத்​து​வம், கல்வி என பல அத்​தி​யா​வசி​யச் செல​வு​களை மகளிர் தாங்​களே நிறைவு செய்ய இத்​திட்​டம் வழி​வகுத்​தது. மற்ற மாநிலங்​களும் இத்திட்டத்தை பின்​பற்றி வரு​கின்​றன.

தொகையை நிறுத்த சூழ்ச்சி: இந்த உரிமைத் தொகையை மேம்​படுத்த வேண்​டும் என நாம் செயல்​பட்டு வந்​தால், அதற்கு எதி​ராக டெல்​லி​யில் இருக்​கும் ஒரு கூட்​ட​மும், தமிழகத்​தில் அவர்​களுக்கு அடிமை​யாக இருக்​கும் இன்​னொரு கூட்​ட​மும், எதிர்​வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலைக் காரணம் காட்​டி, அடுத்த

3 மாதங்​களுக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த, சூழ்ச்சி செய்​வ​தாக தகவல் வரு​கிறது. இதுபற்றி நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர​வும் சிலர் முயற்சி செய்​வ​தாக செய்​தி​கள் வரு​கின்றன. இந்த திட்​டத்தை 3 மாதம் நிறுத்தி வைத்​தால், கடின​மான கோடை​காலத்​தில் கடும் வெயி​லில் வேலைக்​குச் செல்​வ​தால் உங்​களுக்கு எவ்​வளவு வலி ஏற்​படும் என்பதை என்​னால் உணர முடிகிறது.

கோடைகால செலவுகள்: இதை நினைத்​துப் பார்த்​து​தான், இந்த பிப்​ர​வரி மாதம் மட்​டுமின்​றி, அடுத்த 2 மாதங்கள், அதாவது மார்ச், ஏப்​ரலுக்​கான உரிமைத் தொகை தவணை​களை சேர்த்து ரூ.3,000-ம், கூடு​தலாக கோடை​காலச் செலவு​களை கருத்​தில் கொண்டு மேலும் ரூ.2,000 சிறப்​புத் தொகை​யும் சேர்த்​து, இந்த மாதமே ரூ.5,000-ஐ சிறப்பு மகளிர் உரிமைத் தொகை​யாக 1.31 கோடி பெண்​களுக்கு வழங்க உத்​தர​விட்​டேன்.

இந்த ரூ.5,000-ஐ அடுத்த 3 மாதத்​துக்கு நீங்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும் என்​ப​தால், கொஞ்சம் கவன​மாக செல​விடுங்​கள். முடிந்த அளவுக்கு சேமிக்​க​வும் பாருங்​கள். அடுத்து அமையப் போவதும் திரா​விட மாடல் ஆட்​சி​தான். திரா​விட மாடல் 2.0 ஆட்​சிக் காலத்​தில், மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்​கப்​படும். முந்​தைய அரசின் 10 ஆண்​டு​கால ஆட்​சி​யில் தமிழகம் அடைய முடி​யாத பொருளா​தார வளர்ச்​சி​யை, இந்​தி​யாவே திரும்​பிப் பார்க்​கும் அளவுக்கு சாதித்​துக் காட்​டிய​வர்​கள் நாங்​கள். அதனால், எந்த தடை வந்​தா​லும் அதையெல்​லாம் தாண்​டி, தமிழகமே வெல்​வோம் ஒன்​றாக. இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

தொடர்ந்​து, முதல்வர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில், ‘தமிழக மகளிருக்கு இந்த ஸ்டா​லின் தந்த உறு​தி​மொழி​தான் உரிமைத் தொகை. யார் தடை ஏற்​படுத்​தினாலும் அதில் இருந்து பின்​வாங்க மாட்​டேன்’ என்று தெரி​வித்​துள்​ளார். முதல்​வரின் அறி​விப்​பைத்​ தொடர்ந்​து, ஏராள​மான பெண்​கள் அவருக்கு நன்​றியும், வரவேற்பும் தெரிவித்​துள்ளனர்​.

SCROLL FOR NEXT