சென்னை: “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.500 கோடி மதிப்பில் 1,000 குளிர்சாதன வசதி கொண்ட மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும்” என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் சென்னை மாநகர வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து கூறியிருப்பதாவது: நடப்பு நிதியாண்டில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு குளிர்சாதன வசதிகளைக் கொண்ட 1,000 புதிய மின்சாரப் பேருந்துகள் வாங்கப்படும்.
பேருந்து பணிமனைகளில் மின்சாரப் பேருந்துகளுக்கான மின்சாரம் மற்றும் இயந்திரவியல் சார்ந்த வசதிகளை ஏற்படுத்துவதற்காக திருத்த வரவு -செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக ரூ.7,675 கோடி, செயல்திறன் இடைவெளி நிதியுதவி ரூ.2,650 கோடி, பங்கு மூலதன உதவியாக ரூ.1,005 கோடி ஒதுக்கப்படுகிறது. இந்தத் திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,561 கோடி ஒதுக்கப்படுகிறது.
மெட்ரோ திட்டங்கள்: சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை, ஆவடி வழியாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை, ஸ்ரீபெரும்புதூர் மார்க்கத்தில் பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை கூடுதல் மெட்ரோ ரயில் வழித்தடத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைவான ஒப்புதல் வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடக மாநிலம் பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய, கர்நாடக அரசுகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.9,300 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாநில நெடுஞ்சாலைகளை 4 வழிச் சாலைகளாக அகலப்படுத்துதல், புறவழிச் சாலைகள் அமைத்தல் உட்பட பல அம்சங்கள் அடங்கும்.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய, பாதுகாப்பான சாலைகள் இயக்கம் அறிமுகப்படுத்தப்படும். சாலைகள் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தக் கூடிய இந்த இயக்கத்தில், செயற்கை நுண்ணறிவின் மூலம் வேகக் கட்டுப்பாடு விதிமீறல்களைக் கண்காணித்தல், சாலை ரோந்துப் பிரிவு மற்றும் தீவிர காயங்களுக்கான சிகிச்சை மையங்கள் அமைத்தல் ஆகியவை அடங்கும்.
தமிழகத்தில் பல சாலைகள் போதிய பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக இருப்பதால் பயணிப்பது சவாலாகவே உள்ளது. இச்சாலைகளைச் சரி செய்ய திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. சாலைகளில் குறைகள் இருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் ‘நம்ம சாலை செயலி’யின் மூலம் உடனுக்குடன் புகைப்படம் எடுத்து தகவல் தெரிவிக்கலாம். இக்குறைகள் துரிதமாக சீர்செய்யப்படும்.
காவலர் குடியிருப்பு: ஐந்து ஆயிரம் காவலர் குடும்பங்கள் பயனடையும் வகையில் போலீஸ் குடியிருப்பு வளாகங்கள் கட்ட ரூ.431 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விபத்து நிவாரண நிதித் திட்டத்துக்காக 2026-27-ம் ஆண்டுக்கான திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.200 கோடி ஒதுக்கப்படுகிறது. மேலும், 2026-27-ம் நிதியாண்டில் பல்வேறு சாலைப் பாதுகாப்புக்கான பணிகளை மேற்கொள்வதற்காகச் சாலைப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.130 கோடி ஒதுக்கப்படுகிறது.
சட்டம் - ஒழுங்கை சிறப்பாகப் பராமரிக்க, குற்றங்களைக் கட்டுப்படுத்த, காவல் துறையினருக்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இன்றியமையாதவை ஆகும். இந்த நோக்கில், மாவட்டங்களில் காவல் துறையினருக்கான குடியிருப்பு வளாகங்களைக் கட்டுவதற்காக ரூ.431 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 5,000 காவலர் குடும்பங்கள் பயனடையும். இந்த திருத்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு ரூ.17,290 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.