பிரதிநிதித்துவப் படம்

 
தமிழகம்

செங்கல்பட்டில் திறந்தவெளி கிடங்கில் 50 ஆயிரம் டன் நெல் மழையில் சேதம்: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு பகுதியில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சமீபத்தில் பெய்த மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. சேதமடைந்த நெல்லை உடனடியாக அகற்றி, மீதமுள்ள நெல்லை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க - வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், தொழுப்பேடு சமத்துவபுரம் எதிரே திறந்தவெளி சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் இந்திய உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மூடப்பட்ட கிடங்கு வசதி இல்லாத நிலையில், நெல் மூட்டைகள் திறந்தவெளியில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் புகுந்து மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளதாக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக சேமிக்க வேண்டியது அரசின் முக்கியப் பொறுப்பு. மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், நெல் மூட்டைகளை திறந்தவெளியில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைத்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது இயற்கை பேரிடர் அல்ல; நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்ட செயற்கையான பேரிடர்" எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நெல் சேதமடைந்ததற்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து உடனடியாக ஆய்வு நடத்த வேண்டும். சேதத்தின் அளவை முறையாகக் கணக்கிட்டு, சேதமடைந்த நெல்லை அப்புறப்படுத்துவதுடன், சேதமடையாமல் உள்ள நெல் மூட்டைகளையும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்ற வேண்டும்.

மழைக்காலம் தொடங்கும் முன்பே நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான கிடங்குகளில் சேமிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழுப்பேடு மட்டுமின்றி செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் செயல்படும் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை படிப்படியாக அகற்றி, நவீன வசதிகளுடன் கூடிய மூடப்பட்ட சேமிப்பு கிடங்குகளை அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.

SCROLL FOR NEXT