ரங்கம் கோயில் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகி ராம்குமாரை மருத்துவப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீஸார்.படம்: ர. செல்வமுத்துகுமார்
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடிக்கும் மேல் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் கைது செய்யப்பட்டார்.
திருச்சி திருவானைக்காவல் சீனிவாச நகரைச் சேர்ந்தவர் ராம்குமார். திமுக ரங்கம் பகுதிச் செயலாளராக உள்ளார். இவர், ரங்கம் காந்தி சாலையில் உள்ள ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புடைய ரங்கநாதர் கோயில் சொத்தை அபகரித்ததாக கோயில் இணை ஆணையர் சிவராம் குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவில் புகார் கொடுத்திருந்தார்.
அதன் அடிப்படையில் ராம்குமார் மீதும் சொத்து தங்களுடையது என போலி ஆவணங்கள் தயாரித்து ராம்குமாரிடம் ரூ.2.90 கோடிக்கு விற்றதாகச் சென்னையைச் சேர்ந்த பத்மஜா, விஜயா, சவுந்தரராஜன், புதுச்சேரியைச் சேர்ந்த ரங்கவரதன், பத்திரப் பதிவு செய்து கொடுத்த ரங்கம் சார் பதிவாளர் வனிதா ஆகியோர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராம்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதற்காக நேற்று ராம்குமார் வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே அவரது கார் மட்டும் நின்று கொண்டிருந்ததால், அவரை சிலர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
ஆனால், அவரை மாநகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து விசாரித்து வருவதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்ஜாமீன் மனு மீதான விசாரணைக்கு சென்ற திமுக பிரமுகரைத் தனிப்படை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, சார் பதிவாளர் வனிதாவையும் கைது செய்ய தனிப்படை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனு தள்ளுபடி: உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திமுக பகுதி செயலாளர் ராம்குமார், சார் பதிவாளர் வனிதா ஆகியோர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுக்களை நீதிபதி கே.முரளி சங்கர் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.