ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய பங்களாவுடன் கூடிய இடம். உள்படம்: ராம்குமார்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான இடத்தை, போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக திமுக பகுதி செயலாளர் உள்பட 6 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் திமுகவினர் விஞ்ஞானரீதியில் ஊழல் செய்பவர்கள் என்பதை நிரூபித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.
திருவானைக்காவலைச் சேர்ந்தவர் என்.ராம்குமார். திமுக ஸ்ரீரங்கம் பகுதிச் செயலாளர். ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் ரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான இடத்தை ராம்குமார் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துக் கொண்டதாக ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், மாநகர குற்றப் பிரிவு போலீஸில் செப்.10-ம் தேதி புகார் அளித்துள்ளார்.
அதில் ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் கோயிலுக்குச் சொந்தமான பங்களாவுடன் கூடிய 7,515 சதுர அடி இடத்தை, தங்கள் இடம் எனக் கூறி சென்னை நங்கநல்லூர் ரங்கராஜன் மனைவி பத்மஜா, பெங்களூரு கிருஷ்ணசாமி மனைவி விஜயா, இவர்களின் சகோதரர்கள் கோடம்பாக்கம் சவுந்தரராஜன், புதுச்சேரி லாஸ்பேட்டை வெங்கடவரதன் ஆகியோர் சேர்ந்து, ராம்குமார் பெயருக்கு ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 2022 டிச.5-ம் தேதி கிரையம் செய்து கொடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் ரூ.2.90 கோடி பெற்றுள்ளனர். அப்போதைய ஸ்ரீரங்கம் சார் பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இப்புகாரின்பேரில் 6 பிரிவுகளின்கீழ் ராம்குமார், சார்பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவுக்கு நெருக்கமானவராக ராம்குமார் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞான ஊழல்: இதனிடையே இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ரமேஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, கோயில் சொத்தை திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார், போலி ஆவணங்கள் தயாரித்து சட்டவிரோதமாகதனது பெயருக்கு மாற்றியுள்ளார். இடத்தின் மூலப்பத்திரம் தொலைந்துவிட்டதாக புதுச்சேரி காவல் நிலையத்தில் சான்றிதழ் பெற்று பத்திரப் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் இந்த விவகாரத்தில் திமுகவினர் விஞ்ஞான ஊழல் செய்பவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர் என்றார்.
இதுகுறித்து ராம்குமார் கூறும்போது, “இந்த சொத்து ரங்கசாமி ஐயங்காருக்கு பூர்வீக சொத்து. இவரது வாரிசுகள் நீதிபதியாகவும் விஞ்ஞானியாகவும் சிபிஐ வழக்கறிஞராகவும் பதவி வகித்தவர்கள். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த சொத்து குறித்த வழக்கு உயர் நீதி
மன்றத்தில் உள்ளது. இது தெரியாமல் வழக்குப்பதிந்துள்ளனர். எவ்வித தவறும் நடக்கவில்லை. எனது கட்சியிலேயே சிலர் எனது பதவிக்காக இதை செய்திருக்கலாம்” என்றார்.