சென்னை: எண்ணூர் நிலக்கரி கிடங்கில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 சதவீத நிலக்கரி சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை அடுத்த எண்ணூர் மற்றும் அத்திப்பட்டு பகுதியில் தமிழக மின்வாரியத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அனல்மின் நிலையங்களுக்காக நிலக்கரி எண்ணூரில் உள்ள கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிலக்கரி கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, நிலக்கரி மையத்தில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மணலி, மாதவரம், எண்ணூர், எஸ்பிளனேட், திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இதையடுத்து, காலை 6 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, அதிகாரிகளிடம் சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த சம்பவத்தால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆரம்பக்கட்ட கணிப்பின் படி சேதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. உள்நாட்டு நிலக்கரி 28 நாட்களுக்கு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது.
மகாநதி மற்றும் சிங்கரேணி நிலக்கரி சுரங்கங்களிலிருந்து தொடர்ந்து நிலக்கரி கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 கப்பல்கள் மூலம், சீராக நிலக்கரி விநியோகம் உள்ளது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி 75 நாட்களுக்கு போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது. உயிரிழப்பு, காயம் எதுவும் இல்லை.
மொத்தம் 11 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 19 டேங்கர்கள் பயன்படுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தீயணைப்புத் துறை, மெட்ரோ வாட்டர் உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு மூலம் நிலைமை திறம்பட கையாளப்பட்டது.
தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.