குடியாத்தம் அருகே ஜல்லிக் கற்கள் ஏற்றிய டிப்பர் லாரி கவிழ்ந்ததில் 2 பெண்கள் பலியாயினர். மாவட்ட ஆட்சியர் காரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குடியாத்தத்தை அடுத்துள்ள செம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட நாவிதம்பட்டி செல்லும் சாலையில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ஏரிக் கால்வாய் தூர்வாரும் பணி நடக்கிறது. நேற்று காலை 3 குழுவினர் தனித்தனி இடங்களில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் ஒரு குழுவைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள கால்வாய் ஓரத்தில் ஓய்வுக்காக அமர்ந்திருந்தனர். அப்போது சாலை பணிக்காக ஜல்லி ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று வந்தது. மிகவும் குறுகிய சாலையில் இருந்த சிறுபாலத்தை (கல்வெர்ட்) மெதுவாக கடந்து செல்ல முயன்றது.
அப்போது திடீரென அதிக பாரம் தாங்காமல் மண் சரிந்ததில் 10 அடி ஆழமுள்ள கால்வாய் பள்ளத்தில் லாரி சாய்ந்தது. இதைப் பார்த்த தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால், ஜல்லிக் கற்கள் சரசரவென சரிந்ததால் இதில் செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பாப்பு என்ற லட்சுமி (36), மல்லிகா (55) ஆகியோர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த கவியரசன், முனியம்மாள், அசோக்குமார் என்ற பங்காரு, கீதா, சுமதி, விஜயகுமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து 108 ஆம்பு லன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் கிரேன் உதவியுடன் லாரியை தூக்கி நிறுத்திய பின், ஜல்லிகற்களை அகற்றி அடியில் சிக்கியிருந்த இரண்டு பெண்களின் சடலம் மீட்டனர்.
ஆட்சியர் கார் முற்றுகை
விபத்து நடந்த இடத்துக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்த கோபால், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் வந்தனர். அப்போது, செம்பேடு கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியரின் காரை முற்றுகையிட்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் உறுதி யளித்ததின்பேரில் சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.
விபத்து தொடர்பாக லாரியின் ஓட்டுநர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசனை குடியாத்தம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
எல்.கே.சுதீஷ் ஆறுதல்
தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷின் சொந்த கிராமம் செம்பேடு. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதே கிராமம் என்பதால் தகவலின்பேரில் விரைந்து வந்த அவர் விபத்து பகுதியை பார்வையிட்டார். பின்னர், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது, சோளிங்கர் எம்எல்ஏ மனோகரன், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். .