புதுக்கோட்டை மாவட்டம் குளத் தூர் வங்கியிலிருந்து 19 கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில், மேலும் இருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
குளத்தூரில் சிட்டி யூனியன் வங்கியில் 2014 நவம்பர் 30-ம் தேதி இரவு ஜன்னல் கம்பிகளை பெயர்த்தெடுத்து, லாக்கரை உடைத்து அதில் இருந்த நகைகள் திருடப்பட்டன.
திருடியவற்றில் 19 கிலோ நகைகளை ஒரு மூட்டையாகவும், 35 கிலோ நகைகளை மற்றொரு மூட்டையாகவும் கட்டி அதில், 19 கிலோ நகை மூட்டையை தூக்கிச் சென்று புதருக்குள் மறைத்து வைத்துவிட்டு, பின்னர் 35 கிலோ எடை நகை மூட்டையை தூக்கிச் சென்றபோது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் அந்த நகை மூட்டை சிக்கியது. ஆனால், அதை தூக்கிச் சென்றவர் தப்பியோடிவிட்டார்.
இந்த நகை திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கீரனூர் அருகேயுள்ள ஒடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.கோபாலகிருஷ்ணனை(30) போலீஸார் ஜூன் 30-ம் தேதி கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கோபாலகிருஷ்ணனிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள, கீரனூர் போலீஸார் அவரை ஜூலை 1 முதல் 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து, கீரனூர், மாத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலத்தின்படி, வங்கியிலிருந்து நகைகளைத் திருடுவதற்காக திட்டம் தீட்டி யவர்கள், வங்கியிலிருந்து நகை மூட்டைகளைத் தூக்கிச் செல்ல உதவியவர்கள், நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்ய உதவியவர்கள் உள்ளிட்டோரின் பட்டியலை சேகரித்து, அவர்களி டம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோபாலகிருஷ்ணன் திருடிய தில் அதிகளவிலான தங்க நகை களை விற்பனை செய்துகொடுத்த நகை விற்பனையாளரான புதுக் கோட்டை திருக்கோகர்ணம் முதல் வீதியைச் சேர்ந்த ஆனந்த குமாரை(40) போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஆனந்தகுமாரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 3 கிலோ தங்க நகைகள் இவர் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும் அதற்காக இவருக்கு கோபால கிருஷ்ணன் பல லட்சம் ரூபாய் கமிஷன் கொடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆனந்த குமாரை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு கோபாலகிருஷ்ணனின் சகோதரர் அழகர்சாமி(26) கைது செய்யப் பட்டார். கோபாலகிருஷ்ணனிடம் நாளை (ஜூலை 4) வரை போலீஸ் காவலில் விசாரிக்கப்பட உள்ள தால், மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது.