மே தின பூங்கா - சைதாப்பேட்டை இடையே எஞ்சியுள்ள 40 சதவீத மெட்ரோ ரயில் பணியை எந்த நிறுவனத்திடம் ஒப்படைப்பது என்பது குறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் நேற்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் மே தின பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை கேமின் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
இந்த நிறுவனம் திட்டமிட்ட காலத் துக்குள் பணிகள் மேற்கொள்ளாததால் பணியில் இருந்து வெளியேறுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மே தினப் பூங்காவில் இருந்து சைதாப்பேட்டை வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் கடந்த 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கேமின் நிறுவனம் முடித்துள்ள பணிகள், மேலும் அப்பகுதியில் எஞ்சியுள்ள பணிகளின் விவரம் குறித்து மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை தயாரித்துள்ளனர். எஞ்சியுள்ள ரூ.800 கோடி மதிப்புள்ள பணிகளை முடிக்க விரைவில் டெண்டர் வெளியிட்டு நிறுவனத்தை தேர்வு செய்யவுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொண்ட கேமின் நிறுவனத்துடன் SELI என்ற இத்தாலி நிறுவனம் பணியாற்றியுள்ளது. அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கடந்த சில நாட்களாக மெட்ரோ ரயில் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.