சென்னை அருகே பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவி, காதலனுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். திருமுல்லைவாயல் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புழல் காவாங்கரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகள் ராதா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். வெள்ளிக்கிழமை தேர்வு முடிவு வெளிவந்தபோது தனது பதிவு எண்ணை மறந்து விட்டதாகவும், பள்ளிக்குச் சென்று ரிசல்ட் பார்த்து வருவதாகவும் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்ற அவர், பின்னர் வீடு திரும்பவில்லை. மகளை காணாமல் தவித்த பெற்றோர், பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை திருமுல்லைவாயல் அண்ணனூர் ரயில் நிலையம் இடையே எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் தலைதுண்டான நிலையில் இறந்து கிடந்ததாக தகவல்கள் வெளியாகின. தகவல் கிடைத்ததும் ஆவடி இன்ஸ்பெக்டர் சேகரன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர்கள் ராதாவும் அவரது காதலன் மணி (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்பதும் இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
மூலக்கடை திருவீதி அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த கார்பென்டர் மணியை (21) கடந்த 2 ஆண்டுகளாக ராதா காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இல்லை என கூறப்படுகிறது.
அப்படி இருந்தும் எதற்காக இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது தெரியவில்லை.
ராதா, 10 ம் வகுப்பு தேர்வில் 240 மதிப்பெண் கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார்.