தமிழகம்

அரசினர் தோட்டம் – சைதாப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி தீவிரம்: 5 மாதங்களில் முடிக்க திட்டம்

செய்திப்பிரிவு

அரசினர் தோட்டத்தில் இருந்து சைதாப்பேட்டை வரையில் நடந்து வரும் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம்தோண்டும் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இன்னும் 5 மாதத்தில் பணிகள் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் பணி கடந்த 2009–ம் ஆண்டு தொடங்கிய 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில், 24 கி.மீ தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதையாகவும், 21 கி.மீ தூரத்துக்கு உயர்மட்ட ரயில்பாதைகள் (13 ரயில் நிலையங்கள்) அமைத்து இயக்கப்படவுள்ளது.

இதில், ஒரு பகுதியாக அரசினர் தோட்டத்தில் இருந்து சைதாப்பேட்டை வரையில் மெட்ரோ ரயில் பணிகளை மேற்கொள்ள ரஷ்ய நிறுவனமான மாஸ்மெட்ரோ, இந்திய நிறுவனமான கேமன் ஆகியவை இணைந்து பணிகளை மேற்கொண்டன. ரயில் நிலையங்கள் அமைப்பதற்கான பணியை கேமன் நிறுவனம் செய்து வந்தது. சுரங்கம் தோண்டும் பணியை மாஸ்மெட்ரோ நிறுவனம் செய்து வந்தது.

இதற்கிடையே, மாஸ்மெட்ரோ நிறுவனம் திடீரென சுரங்கம் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு ரஷ்யாவுக்கு சென்றுவிட்டது. இதனால், இந்த வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி சில வாரங்களுக்கு மெத்தனமாக நடைபெற்று வந்தது. இதற்கிடையே, கேமன் நிறுவனம் பொறுப்பேற்று ஒட்டுமொத்தமாக சுரங்கம் தோண்டும் பணியை அடுத்த 5 மாதங்களில் முடிக்க வேண்டுமென மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘அரசினர் தோட்டத்தில் இருந்து சைதாப்பேட்டை வரையில் இருபுறமும் சுரங்கம் தோண்டும் பணியை மாஸ்மெட்ரோ செய்து வந்தது. ரயில் நிலையங்களை அமைக்கும் பணியை கேமன் நிறுவனம் செய்து வந்தது. இதற்கிடையே அந்த நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையால் மாஸ்மெட்ரோ நிறுவனம் வெளியேறிவிட்டது. தற்போது, கேமன் நிறுவனம் தொடர்ந்து இந்த பணியை பொறுப்பேற்று மேற்கொண்டு வருகிறது. அரசினர் தோட்டம் – சைதாப்பேட்டை வரையில் சுமார் 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மொத்தம் இருபுறமும் தலா 2 இயந்திரங்கள் மூலம் சுரங்கம்தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு வழிப்பாதையில் இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் முடிக்கப்படவுள்ளன. இதையடுத்து, மற்றொரு பாதையில் சுரங்கம் தோண்டும் பணியை 4 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளோம். இந்த வழித்தடத்தில் ஒட்டுமொத்த பணிகளை அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT