ராசிபுரம் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில், 6 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த கல்குறிச்சி வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர் நேற்று காலை தனது குடும்பத்தினருடன், சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த காட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு காரில் சென்றார்.
மதியம் அங்கிருந்து அனைவரும் காரில் வீட்டுக்குப் புறப்பட்டனர். காரை ஆனந்தன் ஓட்டி வந்தார். மதியம் 4 மணி அளவில் நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி, செல்லியம்பாளையம் அருகே கார் வந்தபோது, எதிரே திருச்செங்கோட்டில் இருந்து ஆத்தூர் மஞ்சினி நோக்கி வந்த மற்றொரு கார் ஆனந்தன் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் 2 கார்களும் நொறுங்கின. ஆனந்தன், அவரது மகன் நந்தகிஷோர் (6) ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுபோல் எதிர்புறம் வந்த காரில் பயணித்த, ஆத்தூர் மஞ்சினியைச் சேர்ந்த ஓட்டுநர் சாந்தக்குமார் (38), பாப்பாத்தி (65), பெரியம்மாள் (50), ரமேஷ் என்பவரின் மூன்று மாத பெண் குழந்தை பிரநிஷா ஆகிய நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இரு கார்களில் இருந்த மோனிஷா (8), விலாசினி (36), சாந்தி (48), ஆர்த்தி, சந்திரன், ராஜூ, ரிஷி, சந்திரகுமார், தேவி, தர்சனா (10), தனிஷியா (5) ஆகிய 11 பேர் காயமடைந்தனர். அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் விசாரணை நடத்தினார். ஆயில்பட்டி போலீ ஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆத்தூர் மஞ்சினி நோக்கிச் சென்ற காரில் மொத்தம் 11 பேர் வந்துள்ளனர். அவர்கள் திருச்செங்கோடு அருகே கோயில் விஷேசத்துக்கு சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டது.