தமிழகம்

என்எல்சி ஊதிய உயர்வு பிரச்சினை: டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை

செய்திப்பிரிவு

என்எல்சி தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் குறித்து டெல்லியில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள், புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக என்எல்சி நிர்வாகத்துடன் பலகட்ட பேச்சுவார்த்தையும் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 20-ம் தேதி இரவு முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சென்னை சாஸ்திரிபவனில் மத்திய அரசு மண்டல தொழிலாளர் ஆணையர் கே.சேகர் முன்னிலையில் நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதுவரை நான்கு சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தும் தீர்வு காணப்படவில்லை.

சென்னையில் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, டெல்லியில் தலைமைத் தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக என்எல்சி தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று டெல்லி செல்கின்றனர். இத்தகவலை தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT