தமிழகம்

ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை விற்க முயன்ற 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கோகெய்ன் போதைப்பொருளை விற்க முயன்ற 4 பேரை வேலூரில் போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: வேலூரில் ஒரு கும்பல் ஹெராயின் போதைப் பொருள் விற்பனை செய்ய முயற்சி செய்வதாக போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், டிஎஸ்பி கமலக்கண்ணன், ஆய் வாளர் நந்தகுமார் மற்றும் போலீஸார் போதைப்பொருள் வாங்குவதுபோல ஆள் ஒருவரை ஏற்பாடு செய்து அனுப்பினர்.

அப்போது 1 கிலோ எடையுள்ள ஹெராயின் ரூ.25 லட்சம் என அந்த கும்பல் தெரிவித்தது. பேரத்தின் முடிவில் ரூ.12 லட்சம் கொடுக்க முடிவானது. அதன்படி, காட்பாடி சில்க் மில் பேருந்து நிறுத்தம் அருகில் ஹெராயின் பாக்கெட்டுடன் நேற்று முன்தினம் இரவு அந்த கும்பல் காத்திருந்தது.

தகவலின்பேரில் சென்ற போலீ ஸார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் அணைக்கட்டு அடுத்துள்ள பெரிய ஊணை கிராமத்தைச் சேர்ந்த ஜாகிர் உசேன், மயிலாடுதுறை அடுத்துள்ள கொரநாடு பகுதியைச் சேர்ந்த ஹமீது, சத்துவாச்சாரி பேஸ்-4 பகுதியைச் சேர்ந்த நிர்மல், வள்ளலார் நகரைச் சேர்ந்த தினகர் என தெரியவந்தது.

இவர்கள் வைத்திருந்த போதைப் பொருள் ரசாயன முறையில் ஆய்வு செய்து, அது கோகெய்ன் என உறுதி செய்யப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.1 கோடிக்கு மேல் இருக்கும்.

ஆற்காட்டைச் சேர்ந்த தனஞ்செழியன் என்பவர் மூலம் இவர்களுக்கு போதைப்பொருள் கிடைத்துள்ளது. ஜாகிர் உசேன், ஹமீது மற்றும் நிர்மல் ஆகியோர் ஏற்கெனவே ‘ரைஸ் புல்லிங்’ மோசடி கும்பலிடம் பல லட்சம் பணம் கொடுத்து ஏமாந்துள் ளனர்.

இழந்த பணத்தை மீட்க செம்மரம் கடத்த முயன்றுள்ளனர். ஆந்திராவில் கெடுபிடி அதிகமான தால் செம்மர கடத்தல் திட்டத்தை கைவிட்டனர். ஹெராயின் போதைப் பொருள் கடத்த முயன்றுள்ளனர். இவர்களுக்கு போதைப்பொருள் விற்க முயன்ற கும்பல் குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT