தமிழகம்

டார்னியர் விபத்துப் பகுதியில் கிடைத்தது: நீதிமன்ற அனுமதியுடன் மனித எலும்புக்கு மரபணு சோதனை - கடலோர காவல் படை ஐ.ஜி. தகவல்

செய்திப்பிரிவு

டார்னியர் விமான விபத்துப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித கால் கட்டை விரல் எலும்பு, நீதிமன்ற அனுமதி யுடன் மரபணு சோதனை செய்யப்படும் என்று கடலோர காவல் படை ஐ.ஜி. கூறினார்.

கடலோர காவல் படைக்கு சொந்தமான டார்னியர் விமானம் கடந்த மாதம் 8-ம் தேதி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் திடீரென காணாமல் போனது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒலிம்பிக் கேன்யான் கப்பல் உதவியுடன் விமானத்தை தேடும் பணி நடந்தது. 34 நாட்களுக்கு பிறகு விமானத்தின் கருப்புப் பெட்டி கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் 80 சதவீத பாகங்கள் கிடைத்ததால், தேடும் பணி நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில், விபத்து நடந்ததாக சந்தேகிக்கப்படும் இடத்தில் கிடைத்த மனித கால் கட்டை விரல் எலும்பு, விமானிகளுடையதா என்பதைக் கண்டறிய மரபணு (டிஎன்ஏ) சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி கடலோர காவல் படை கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. சர்மா ‘தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:

கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்பு யாருடையது என்பதை கண்டுபிடிக்க தமிழக தடயவியல் துறை மூலம் மரபணு (டிஎன்ஏ) சோதனை நடத்தப்பட உள்ளது. இதற்காக, மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் முறைப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட பொருட்களை விமானிகள் வித்யாசாகர், சுபாஷ் சுரேஷின் குடும்பத்தினர் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். இன்னொரு விமானி சோனியின் குடும்பத்தினர் 15-ம் தேதி இரவு போபாலில் இருந்து சென்னை வருகின்றனர். அவர்கள் மீனம்பாக்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் வைக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் உடைகள் உள்ளிட்ட பொருட்களை 16-ம் தேதி பார்க்கின்றனர்.

இவ்வாறு ஐ.ஜி. சர்மா கூறினார்.

SCROLL FOR NEXT