தமிழகம்

நன்மங்கலத்தில் ரூ.1 கோடியில் உருவாகிறது வனவியல் செயல்விளக்க மையம்: சுவாரஸ்ய அனுபவம் தர வனத்துறை புது முயற்சி

ச.கார்த்திகேயன்

வன உயிரினங்கள் குறித்து மாணவர்கள் எளிதாகவும், சுவாரஸ்யமாகவும் தெரிந்துகொள்ளும் விதமாக சென்னை நன்மங்கலம் காப்புக் காடு பகுதியில் தொழில்நுட்ப வசதிகளுடன் ‘வனவியல் செயல்விளக்க மையம்’ அமைக்கப்பட்டு வருகிறது.

வன விலங்குகள் குறித்த ஆர்வம் கொண்டவர்களுக்கு சென்னையில் சிறந்த பொழுதுபோக்கு இடங்களாக விளங்குபவை கிண்டி தேசிய சிறுவர் பூங்கா, வண்டலூர் உயிரியல் பூங்கா. மற்றபடி, வன உயிரினங்கள் குறித்த அறிவை பெருக்கிக்கொள்ளும் வகையிலும், சுவாரஸ்யமாகவும் விவரங்களை அறிய வேறு இடங்கள் இல்லை. இந்த குறையைப் போக்கும் விதமாக, நன்மங்கலம் காப்புக் காட்டில் தற்போது வனத்துறை சார்பில் ‘வனவியல் செயல்விளக்க மையம்’ அமைக்கப்பட்டு வருகிறது.

ராணுவ கட்டுப்பாட்டில் இருந்த நன்மங்கலம் வனப்பகுதி, 1974-க்கு பிறகு தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்பகுதி காப்புக் காடாக அறிவிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த காப்புக் காடு 320 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்குள்ள ஏரியில் அரிய வகை பறவைகளை பார்க்க முடியும். தற்போதும் பல ஊர்களில் இருந்தும் இயற்கை ஆர்வலர்கள் இங்கு வருகின்றனர். காலை, மாலை வேளைகளில் தொலைநோக்கி மூலம் அரிய வகை பறவையான கொம்பு ஆந்தையை ஆர்வத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.

இங்கு அமைக்கப்படும் வனவியல் செயல்விளக்க மையம் பற்றி வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இத்திட்டத்துக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் முடிந்து விட்டன. மாணவர்களைக் கவரும் நவீன தொழில்நுட்ப சாதனங்களை அமைக்க ரூ.21 லட்சத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இதன்மூலம் தொடுதிரைகள், எல்சிடி திரைகள் ஆகியவை வாங்கப்பட உள்ளன. தொடுதிரையில் வன உயிரினங்கள் மற்றும் அவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். மாணவர்கள் திரையைத் தொட்டு பதில்களை தேர்வு செய்யலாம்.

எல்சிடி திரையில்..

பல்வேறு வன உயிரினங்களின் படங்கள், அவற்றின் பெயர்கள், வாழ்க்கை முறை ஆகியவற்றை எல்சிடி திரையில் காணலாம். இது மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறு உயிரினங்களுக்கும் பங்கு உண்டு என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் வண்ணத்துப் பூச்சி, வெட்டுக்கிளி, கரையான் போன்றவை உருப்பெருக்கம் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட உள்ளன.

மேலும் மாணவர் குழுக்கள் 2 நாட்கள் இங்கேயே தங்கியிருந்து, மலையேற்ற அனுபவத்தைப் பெறுவது, வனச் சூழலை தெரிந்துகொள்வது போன்றவற்றுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கான கட்டணம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த புது முயற்சி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT