சென்னையில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியானதால், மாநகராட்சி அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் வடக்கு ஐகோர்ட் காலனியை சேர்ந்தவர் கெஜலட்சுமி (40). கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த 8-ம் தேதி அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் கெஜலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம், சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர சுகாதார அலுவலர் டாக்டர் ஜெகதீசன் கூறும்போது, “சென்னை மாநகராட்சி சார்பில் வில்லிவாக்கம் ஐகோர்ட் காலனி உட்பட சென்னை முழுவதும் மக்களிடம் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாமி ஃபுளூ மாத்திரைகளை கொடுத்துள்ளோம். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் இல்லை. உயிரிழந்த பெண் திருப்பதி சென்று வந்துள்ளார். அங்குதான் அவருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.