காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களில் தமிழக அரசின் புதுவாழ்வு திட்டத்தின் கீழ், ஏழை மகளிரை தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுராந்தகம், அச்சிறுப்பாக்கம், குன்றத்தூர், உத்திரமேரூர் ஆகிய 4 ஒன்றியங்களில் நேற்று நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை, மாவட்ட புதுவாழ்வு திட்ட மேலாளர் தனசேகரன் தொடங்கிவைத்தார். இந்த திட்டம் குறித்து அவர் கூறியதாவது: ‘கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் உறுப்பினர்களை கொண்டு, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, நோய் தாக்குதலால் உடலுழைப்பை இழந்த கணவர்களை கொண்ட பெண்களை கண்டறிகிறோம். பிறகு அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு தேர்வு செய்யப்படும் பெண்களின் விருப்பத்தின் பேரில் அவர்களது மகன், மகள் ஆகியோருக்கும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் 80 சதவீத வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தால் மட்டுமே, அந்நிறுவனத்துக்கு பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு உறுதி அளித்த நிறுவனங்களின் மூலம், மறைமலைநகர், உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் நேற்று பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சி குறுகிய காலமாக 1 முதல் 3 மாதங்களும், தேர்வு செய்யப்படும் வேலை வாய்ப்புக்கு ஏற்ப ஓர் ஆண்டு பயிற்சியாகவும் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் பயிற்சி பெறும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அரசு செலவிடுகிறது என்று அவர் தெரிவித்தார்.