கவுரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யத்தின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியா மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத் தின்போது அரசியல் கட்சிகள், தலித் அமைப்புகள், தாழ்த்தப்பட்டோர் ஊழியர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினர் புகார் மனுக்களை அளித்தனர்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கவுரவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தை கடுமையாக்க வேண்டும், எஸ்.சி. சிறப்பு தொகுப்பு நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் ஆணையத்திடம் முன் வைத்தனர்.
ஆணையத்தின் தலைவர் பி.எல்.புனியாவை சந்தித்து மனு அளித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழகத்தில் வேறு ஜாதி பெண்களை காதலிக்கும் தலித் ஆண்கள் கொடூரமாக கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும். எஸ்.சி. சிறப்பு தொகுப்பு நிதியை வேறு துறைகளுக்கு மாற்றுவதை தடுத்து தலித்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக சமத்துவப் படை அமைப்பின் தலைவருமான சிவகாமி, ஆணை யத்தின் தலைவர் பி.எல்.புனியாவிடம் மனு அளித்தார். பின்னர் ‘தி இந்து’ விடம் அவர் கூறியதாவது:
எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்களில் 7 சதவீதத்தினருக்கு மட்டுமே தண்டனை கிடைக்கிறது. திருச்செங்கோடு கோகுல்ராஜ் படுகொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அவரது குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்