தூத்துக்குடியில் கடைகளில் ஹெல்மெட் கிடைக்காததாலும், தரமற்ற ஹெல் மெட்டுகள் அதிகப்படியான விலைக்கு விற்கப்படுவதாலும் பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆவணங்கள் பறிமுதல், அபராதம் விதித்தல், வாகனம் பறிமுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடும் தட்டுப்பாடு
தூத்துக்குடி மாவடத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோரில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்துவிட்டனர். மீதமுள்ளவர்களும் ஹெல்மெட் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் கடைகளில் ஹெல்மெட் இருப்பு இல்லை. மேலும் சில இடங்களில் தரம் குறைந்த ஹெல்மெட் அதிக விலைக்கு விற்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஹெல்மெட் வாங்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
திடீர் மறியல்
தூத்துக்குடியில் நேற்று சிலர் ஹெல்மெட் தேடி அலைந்தனர். எந்த கடையிலும் ஹெல்மெட் கிடைக்காததால் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஹெல்மெட் கிடைக்காத நிலையில் போலீஸார் நடவடிக்கை எடுப்பது வேதனை அளிக்கிறது. ஹெல்மெட் கிடைக்கும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். போலீஸார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மண்சட்டி அணிந்து போராட்டம்
இந்நிலையில் ஹெல்மெட் கிடைக்காததை கண்டித்தும், தரமற்ற ஹெல்மெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதை கண்டித்தும், ஹெல்மெட் கிடைக்கும் வரை அவகாசம் வழங்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
ஹெல்மெட்டுக்கு பதிலாக தலையில் மண் சட்டிகளை அணிந்து இருசக்கர வாகனங்களில் வந்து, தூத்துக்குடி தென்பாக போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள போக்குவரத்து போலீஸ் ஆய்வாளரிடம் மனு கொடுத்தனர்.
ஹெல்மெட் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போலீஸாரின் நடவடிக்கை தொடர்கிறது. நேற்றும் பல்வேறு இடங்களில் போலீஸார் வாகன சோதனை நடத்தினர்.
தூத்துக்குடியில் ஹெல்மெட் கிடைக்காததைக் கண்டித்தும், அதிக விலைக்கு விற்கப்படுவதைக் கண்டித்தும், தலையில் மண் சட்டி அணிந்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.