ஓமன் நாட்டில் சுற்றுலா பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், திருச்சியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
ஓமன் நாட்டில் கலாலா என்ற பாலைவனப் பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை காரும் சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. காரில் சென்ற இந்தியர்கள் 5 பேர் உடல் கருகி இறந்தனர். அவர்கள், வேலூர் மாவட்டம் பாகாயம் பிருந்தாவனம் நகரைச் சேர்ந்த ஸ்டீபன் (43), ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (32), மாதனூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் (23), கேரளாவைச் சேர்ந்த பஷீர், மற்றொருவர் திருச்சி மாவட்டத் தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
மஸ்கட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரேடியோலஜி பிரிவில் ஸ்டீபன் பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவருடன், மனைவி எப்சி (37), மகள் ஷரான் (8) ஆகியோர் மஸ்கட்டில் தங்கியிருந்தனர். மற்ற 2 குழந்தைகள் வேலூர் பாகாயத்தில் தன் தாத்தா, பாட்டியுடன் தங்கியுள்ள னர். எப்சி தனது மகளை அழைத்துக் கொண்டு கடந்த வாரம் இந்தியா வந் தார். ஸ்டீபன் அங்கேயே இருந்தார்.
இவருடன் அதே மருத்துவமனையில் சுரேஷ்குமார், திவாகர் மற்றும் திருச்சியைச் சேர்ந்தவர் பணியாற்றி வந்தனர். ஏமன் நாட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் இம்மானுவேலு என்பவரை சந்திக்க ஸ்டீபன், திவாகர், சுரேஷ்குமார், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர், கேரளாவைச் சேர்ந்த பஷீர் ஆகிய 5 பேரும் ஒரு காரில் ஜூலை 17-ம் தேதி சென்றுள்ளனர். காரை பஷீர் ஓட்டியுள்ளார். நண்பரை சந்தித்துவிட்டு திரும்பி வரும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சோகத்தில் உள்ளனர். உடல்களை விரைவாக சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்களுக்கு உரிய இழப் பீட்டை ஏமன் நாட்டு அரசிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேலூரில் தனியார் மருத்துவனையில் பணியாற்றியபோது கிடைத்த வாய்ப்பினால் ஓமன் நாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்டீபன் சென்றார். ராணிப்பேட்டை சுரேஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றார். மாதனூர் திவாகர் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் மஸ்கட் சென்றார்.
சுரேஷ்குமாருக்கு திருமணமாகி சோபனா (32) என்ற மனைவியும், ஒரு வயதில் குழந்தையும் உள்ளனர். திவாகருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருச்சியைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை.